உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

11

திண்பொருள்களையும்விட இது மிகுதியாகவும் விரைவாகவும் நேர்மையுடனும் உயிர்க்காலுடன் கலந்து துருப்பிடிப்பதால் கிட்டத்தட்ட எப்போதும் கருப்பாகவே இருக்கிறது. செம்பு பொன்னிலும் பழுப்புடைய திண்பொருள். பொன்னுக்குப் பழுப்பேற்றுவதற்குக் கூடப்பயன்படுவது. ஆயின் இரும்புக்கு அடுத்தபடி விரைவில் இது உயிர்க்காலுடன் கலந்து நிறம் கெடுகிறது. பளப்பளப்பில் பொன்னுக்கு மிகவும் அணுக்க முடையது பித்தளை. இது செம்பும் துத்தமும் கலந்த கலவை. உயிர்க்காலுடன் அவ்வளவு விரைவாகக் கலக்காததனால் பொன்னைப் பயன்படுத்த முடியாத பேரளவான பணிகளுக்கு இது செல்வரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெண் பித்தளை என்ற இன்னொருவகையுமுண்டு, செல்வர் வீட்டுக் கதவுகள், மேடைப்பலகை அறைகள், பெட்டிகள் முதலியவற்றின் பிடிகளும் கலங்களும் இவற்றால் செய்யப்படுகின்றன. உண் கலங்களுள் புளிப்புள்ள உணவுகள் வைக்கப் பித்தளையும் செம்பும் ஆகா. புளிப்புப் பட்டுவிட்டால் இவற்றால் நச்சுத் தன்மையுடைய களிம்பு ஏற்படுகின்றது. இதனைத் தடுக்க ஈயமோ ஈயப் பூச்சோ பூசுகின்றனர். ஆனால் ஈயம் சூடான உணவுக்கு விலக்கப் படவேண்டும். இத் தீங்குகளிலிருந்து பாதுகாப்பாக இன்று கண்ணாடிக் கலங்களும் வெண்கலக் கலங்களும் அலுமினியக் கலங்களும் மங்கு அல்லது பீங்கான் கலங்களும் வழங்குகின்றன. ஆனால் அழகிலோ, தூய்மையிலோ, மேற்கூறிய எத்தகைய தீங்கிற்கும் ஆளாகாத தன்மையிலோ இவற்றுள் எதுவும் வெள்ளிக்கும் பொன்னுக்கும் ஈடாக மாட்டாது. ஆகவே முதல்தரச் செல்வரும் மன்னரும் வெள்ளி அல்லது அதனினும், மிக்கதான பொற் கலங்களை உண் கலங்களாகவும் பரிமாறும் கலங்களாகவும் வழங்குகின்றனர்.

பொன்னில் வெள்ளி கலக்குந்தோறும் அது பசுமையாகியும் வெளிறியும் தோன்றும். செம்பு கலக்குந்தோறும் பழுப்பும் செந்நிறமும் மிகுதியாகும். சுரங்கங்களில் பொன் உருகி ஓடும்போது பச்சைப்பசேலென ஒளி வீசுவது அதில் கலந்த வெள்ளி துத்தம் முதலியவற்றாலேதான்.

பொன் இயற்கையன்னையின் மடியிலிருந்து எடுக்கப்படும் போது பல பொருள்களுடன் கலந்து சேர்ந்துதான் வருகிறது.