உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

15

கலப்பு மிகைபட மிகைபட மாற்றுக்குறைவு என்றும் கொள்ள வேண்டும். பொன்னின் மாற்றை உரைகல்லில் உரைத்துக் காண்பர். மையெனக் கருத்துச் சற்றே சுரசுரப்பான உரைகல்லில் மிகுதியுந்தேய்வில்லாமலே பொன்னின் வடு எளிதில்படும். அதன் நிறத்திலிருந்து மாற்றை நுனித்துணர்வர் கம்மியரும் வணிகரும். பொன்னிலுள்ள வடுக்களை அகற்றவும் அதனைத் தனித்தெடுத்து வைத்துக்கொள்ளவும் உதவும்படி கருமையான ஒருவகை மெழுகையும் அவர்கள் வழங்குகின்றனர். நிறத்தை மட்டுங் கொண்டு எளிதில் மாற்றை உணர முடியாதவர்கள் மாற்று ஆணிகள் என்ற பலவகை மாற்றுக்கள் உடைய பொன் ஆணிகளின் கோவை ஒன்றை வைத்துக்கொண்டு,பொன்வடுவுடன் அவற்றின் வடுக்களை ஒப்புமை நோக்கி மாற்றறிவர்.

நேர்மையை மேல் நாட்டினர் வேறுமுறையில் 24 மாற்று நிலைகள் (Carat) ஆல் வகுப்பர். ஆங்கில அரசியல் ஏற்புத் தங்கம் (British Standard Gold) 22 மாற்று நிலை உடையது. இதில் 100-க்கு 91- 67 பங்கு பொன்னும் 8.33 பங்கு செம்பும் உண்டு. வாணிபத்துக்கான பொன் 19 1/2 மாற்றுநிலை இருந்தாலே சட்டப்படி நல்ல தங்கமாகும். 19 மாற்றுநிலைப் பொன் மலிவானது. உறுதியான வேலைப்பாட்டிற்கும் ஏற்றது.

பொன்னின் சிறந்த பண்புகளுள் முதன்முதலாக மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தது அதன் அழகிய நிறமும் பளபளப்பான தோற்றமுமேயாகும். மனிதன்பழங்காலந்தொட்டு அதனைத் தனக்கும் தனது பெண்மை உலகிற்கும் பூண்களும் அணிகலனும் செய்ய வழங்கினான். இன்றும் இந்நாட்டில் நாம் பொன்னைச் சிறப்பாக இவ்வகையிற்றான் பயன்படுத்துகிறோம். இப் பழங்கால வழக்கத்தின் இடையறாத் தொடர்பினால், உண்ண உணவுக்கும் உடுக்க உடைக்கும் அல்லற்படும் இந்நாளிலுங்கூட மிகுதியான தங்கம் இந்நாட்டில் தேங்குகிறது என்று பொருளியலார் கூறுகின்றனர். அதற்கேற்ப நாம் ஆங்கில நாட்டுத் தங்கக் காசுகளைக் காசுகளாக வழங்காமல் உருக்கிப் பூண்களுக்கான தங்கமாகவே பயன்படுத்துகிறோம்.

பொன் நூல்களும் பொன் வெள்ளி கலந்து இழைத்த நூல்களும் தனித்தும் பிற நூல்களுடன் கலந்தும் செல்வர் களுடைய ஆடைகள், தலையணிகள், சட்டைகள் முதலியவற்றிற்கு