உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 39

முள்ளதாய்த் திண்ணமாயிருக்கவேண்டும். அருமுயற்சியால் அகழ்ந்த சுரங்க வழிகளில் இக்குழாய்கள் மிகுந்த இடத்தை அடைத்துக்கொண்டன. மேலும் நீளம் மிகுந்தோறும் நீராவியின் சூடு வீணாகக் கழிந்து போவதனால் ஒன்றிரண்டாயிர அடிகளுக்குக் கீழும், சில ஆயிர அடிகளுக்கு மேலும் நீண்டு சுரங்கங்கள் வளர்வதற்கில்லாதிருந்தது.

இந்நிலைகளனைத்திலும் பெரும்புரட்சிகளை உண்டு பண்ணிற்று மின் வன்மை. பாரிய இருப்புக் குழாய்களுக்கு மாறாக மெல்லிய செப்புக் கம்பிகள் போதியவை ஆயின. இவை எத்தனை தொலை வேண்டுமானாலும் ஆற்றல் குன்றாது நீண்டு செல்லத்தக்கவை. ஆகவே சுரங்கங்கள் எல்லையற்று ஆழ்ந்தும் நீண்டும் செல்ல முடிந்தன. தென் ஆப்பிரிக்காவில் ஊர்-ஆழ்- சுரங்கம் (Village Deep Mine) என்பது செங்குத்தாக அரைக்கல் (2550 அடி) ஆழமுடையது. இதுவே ஒரு காலத்தில் உலகின் மிக ஆழமான சுரங்கமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதே நாட்டில் திரான்ஸ்வாலில் இராந்துப் பாறைச் சுரங்கத்தில் செங்குத்தாக 8000 அடிவரை சென்று அதன் பின்னும் குறுக்காகப் பல கல் செல்ல முடிகிறது. இராந்துப்பாறை சற்றுச் சாய்வாகச் செல்வதனால் இனி அதில் சுரங்கம் தோண்டுபவர் இன்னும் மேன்மேல் ஆழமாக அகழ்ந்து கொண்டுபோக வேண்டிவரும். மின் ஆற்றல் இல்லாவிட்டால் இப்புதைபட்ட பாறைகளிலுள்ள பொன் அத்தனையும் புதைபட்டேதான் கிடக்கவேண்டும்.

இதே மின் ஆற்றலால்தான் கோலாற்றில் மண்ணினுள் ஒருகல், இருகல் தொலை சுருங்கைசெய்து தாய்ப்பொன் பாறையைப் பின்பற்ற முடிகிறது. காற்றும் ஒளியும் முன்னையிலும் எத்தனையோ மடங்கு மலிவாக எத்தனையோ மடங்கு பொலிவுடன் கிடைத்தன. பாறைகளை உடைப்பதிலும், பாறைகளையும் தொழிலாளிகளையும் பல்லாயிர அடி ஏற்றியிறக்கிச் செல்வதிலும், மக்களுக்கு அப்பாதாள உலகில் நிலவுலகிலும் கிட்டாத எல்லாவகை வாய்ப்புகளும் செய்வதிலும் பழைய அலாவுதீன் கதையின் பூதங்களைவிடப் பன்மடங்கு இம் மின்வன்மை சுரங்கத்தொழிலுக்கும் தொழிலாளருக்கும் உதவுகின்றது. ஆவிக் குழாய்களின் வெப்பத்தால் முன் சுரங்கத்தின் வெப்பம் பொறுக்கமுடியாததாயிருந்தது. இன்று