உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

153

அல்தெயாவின் செயலற்ற துயருக்குக் கிளியோப்பாத்ரா குரல் கொடுத்துவிட்டாள். கட்டையை அணைத்தெடுக்க அன்று விரைந்ததைவிட அதை எடுத்துத் தீக்கிரையாக்க இன்று அவள் தாயுடல் விரைந்தது.

பாதி எரிந்த கரிக்கட்டை, அது மீண்டும் பற்றிற்று. பற்றிப் புகைந்து, எரிந்தது.

தாய் சிரித்தாள்.

மனைவி அது எரியும்வரை பொறுக்காதவள்போல், அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அனலுடன் அனலாகத் தன் கண் பார்வையால் அதை எரிப்பதுபோல, அவள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னை எரிப்பதுபோலக் கட்டை எரியப் பார்த்திருந்த தாய் - கட்டையைத் தீ எரிப்பது போதாமல், கண்ணில் கனலை எழுப்பி அதை எரிப்பவள்போலப் பார்த்திருக்கும் மனைவி இக்காட்சியைக் கண்டான் மெலீகர்!

கடமை, உரிமை, காதல் ஆகிய மூன்றும் இழந்த அவன் வாழ்வு உள்ளூரப் புகைந்தழன்றது!

அகஉலகின் இப்புயல்களிடையே புறஉலகின் ஒரு காற்று வந்து புகுந்தது.

"முரட்டு வகுப்பினர் பன்றிக்காகப் பழிவாங்கப் புகுந்துவிட்டனர்,” என்ற செய்தி அவன் காதில் விழுந்தது.

அவர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆனால், அவர்கள் பேசவில்லை.

மற்றக் காலிடோனியர் நெஞ்சுகள் துடித்தன -மெலீகர் குடும்பப் புயல்களிடையே சிக்கிவிட்டான். இனி தமக்கு உதவுவானோ மாட்டானோ என்று அவர்கள் உள்ளங்கள் தத்தளித்தன.

"நான் கடமையாற்றுகிறேன் கட்டை விரைந்து எரியட்டும்,” என்று கூவிக்கொண்டு மெலீகர் வெளியேறினான்.

அதிர்ச்சி, மகிழ்ச்சி, பாராட்டு, மாளாத்துயரம் ஆகிய பல்வகை உணர்ச்சிகளுக்கும் ஒருங்கே ஆளாயினர் காலிடோனியர்