உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

167

தென் ஐரோப்பா கடந்து, அவன், நடு ஐரோப்பா, வட ஐரோப்பா மீது பறந்தான். உலகின் வடகோடியை அடுத்து மனிதரின் ஊழைவகுத்த மூன்று கிழக்கன்னியர் வாழ்ந்த கிரேயா நாட்டை அவன் அடைந்தான். இம்மூவரும் குருடர்கள்; ஆனால், மூவருக்கும் பொதுவாக ஒரே கண் இருந்தது. அதை மாறிமாறிப் பெற்றுத்தான் அவர்கள் பார்க்க வேண்டும்.

மெடூசாவைப் பற்றிய விவரங்கள் யாவும் அவள் இருந்த நாட்டின் திசையும் வழியும் தெரிந்தவர்கள் இக்கிழக்கன்னியர்கள் மட்டுமே. அவர்களிடமிருந்துதான் அதைப் பெர்ஸியஸ் பெற வேண்டும் என்று அதேனா கூறியிருந்தாள். அவள் கூறிய படியே செயலாற்ற எண்ணிப் பெர்ஸியஸ் அவர்கள் அருகே சென்றான்.

பெர்ஸியஸ் பின்புறமிருந்து வருவதைக் காற்றசைவால்

கிழக்கன்னியருள் ஒருத்தி அறிந்தாள். உடனே வருபவனைப் பார்ப்பதற்காக அவள் பக்கத்திலிருந்தவளிடம் கண்ணைக் கேட்டாள். கண் கைக்குக் கை மாறியது. அந்த நேரத்துக்கே பெர்ஸியஸ் காத்திருந்தான். கண் ஒரு கையிலிருந்து ஒருகைக்கு மாறுமுன் அவன் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டான். மூவருக்கும் உயிரினும் மேலான செல்வம் அந்தக் கண். அதை யாரோ பறித்துவிட்டது உணர்ந்த மூன்று குருட்டுக் கிழவியரும் கோவெனக் கதறினார்கள்.

“மெடூசாவைக் காணும் வழியைக் கூறுங்கள், உங்கள் கண்ணை அப்போதுதான் தருவேன்," என்றான் பெர்ஸியஸ்.

அவர்கள் மேலும் அழுதனர். ஏனென்றால், மெடூசாவிடம் அவர்களுக்குப் பாசம் மிகுதி. ஆனாலும் கண்ணைப்பெற வேறு வழியில்லாமல், அவர்கள் மெடூசா பற்றி யாவும் கூறினர்.

கிழக்கன்னியரிடமிருந்து வழியறிந்தபின், பெர்ஸியஸ் மீண்டும் தெற்காகத் திரும்பிப் பறந்தான். உலகின் தென்கோடி கடந்தபின் பகலாட்சி தாண்டி இரவாட்சியின் பரப்பில் சென்றான். உலகிற்கப்பாலுள்ள எல்லையற்ற புறக்கடல் எங்கும் கருங்கும்மென்று இருளில் இருளாகத் தோற்றிற்று.

ருண்ட கடலின் நடுவே ஓர் அகலமான தீவு இருந்தது. அதில் மூன்று பெண்கள் இருந்தனர். இருவர் உறங்கினர். ஒருத்தி மட்டும் சுற்றிச்சுற்றி நடந்தும் பறந்தும் அவர்களைக் காத்தாள்.