(
||
I. திருவின் ஆக்கம்
1. தீமைதரும் படிப்பினை
உடல் துன்பம், மனத்துயரம், அமைதியின்மை ஆகிய மூன்றுமே வாழ்க்கையில் இன்ப ஒளி பரவாத இருண்ட நிழற் கூறுகள். தேள் கொட்டினாற் போன்ற துன்பத்துக்கு ஆளாகியும் துடிதுடிக்க நேராத உள்ளமுடையவர்கள்; மனக்கலக்கம் என்னும் ஆழ்சுழியில் அகப்பட்டும், தத்தளிக்க நேராத சித்த முடையவர்; சொல்லரிய துயரத்தால் வெப்ப மடைந்தும் கண்ணீரால் ஒளிமழுங்கப்பெறாத கண்களை உடையவர் ஆகியவர்களை இவ்வுலகில் கண்டால் அரிது. எத்தனையோ குடும்பங்களின் நோவும் பிணியும் சாக்காடும் வந்து புகுந்து, குடும்பங்களின் மீது துன்பக் கருத்திரையிட்டு மூடியுள்ளன. எத்தனையோ குடும்பங்களில் அவை மனித இதயத்தை மனித இதயத்திடமிருந்து பிரித்துள்ளன. தீமையின் வலை அறுக்க முடியா உறுதி உடையதாகவே தோன்றுகிறது. அதில் சிக்கி நோவு, துன்பம், இன்னா இடர்கள் ஆகியவற்றுடன் பலர் மல்லாட வேண்டி யவர்கள் ஆகின்றனர்.
வாழ்வின் மீது பாய்ந்து படரும் இத்தீமையிலிருந்து தப்பிப் பிழைக்கவோ, அல்லது அவற்றின் ஆற்றலைக் குறைக்கவோ நாடாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இதற்காகப் பல்வேறு சூழ்ச்சித் திறங்களில் சென்று சிக்குபவர் பலர். இன்னும் பலர் கண்மூடித்தனமாகப் பாய்ந்து ஓடிப் பல கிளை வழிகளில் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏதாவது நிலையான இன்பமொன்றைச் சென்றடைந்து, திரும்ப இத்துன்பநிலைக்கு வராமலிருக்கவே விரும்புகின்றனர். இதில் ஐயமில்லை. ஆனால் உண்மையில் அவர்கள் அடையும் இன்பம் என்ன?
கிளைவழிகளில் சென்று நாடுகின்ற இன்பங்களில்,குடி இன்பமும் கூத்தியர் இன்பமும் அறிவை மழுங்க வைப்பவை;