திருநிறை ஆற்றல்
139
அழுகிறது.ஆனால் மனிதனோ எப்போதும் குழந்தைப்பருவத்தில் தனக்கிருந்த முயற்சியற்ற, கட்டுப்பாடற்ற நல்லின்பத்தையே நாடுகின்றான். வறியோர் ஏழ்மையின் கட்டுப்பட்ட நிலையை ஒழித்து மனம்போல வாழ உதவும் செல்வத்துக்கு ஏங்கி அலைகிறார்கள். ஆனால் செல்வரோ செல்வத்தைப் பெற்றபின் கட்டுபாடற்ற இன்ப வாழ்வு வாழமுடிவதில்லை. இன்னும் மிகுதி செல்வத்தை ஈட்டவேண்டுமென்ற பேரவா அவர்களை அலைக்கிறது. செல்வத்தைக் காக்கும் கவலை, வறுமை வந்து விடுமோ என்ற அச்சம் அவர்களை உருக்குலைக்கின்றன. சிலசமயம் அவர்கள் கிட்டிய இன்பப் பொருள்களை விட்டு விட்டுக் கிட்டாத இன்ப நிழல்களைத் தேடி அலமருகின்றனர்.
மற்றும் சமய உணர்ச்சி, அறிவு விளக்கக் கோட்பாடு, கலைக் குறிக்கோள் ஆகியவற்றில் கருத்துச் செலுத்திய சிலர் அவற்றால் மனநிறைவு பெற்று அமைதி அடைந்து விட்டதாக எண்ணு கின்றனர். ஆனால் வல்லமை வாய்ந்த, கவர்ச்சியாற்றல் மிக்க ஒரு பேரவா தலை நீட்டியதும் அவர்கள் மாய் அமைதி வன்பாலையில் மலர்ந்த மலராக வாடி வதங்குகிறது. செயல்துறை அடைந்ததும் கருத்தியல் கோட்பாடுகள் பயனற்றவை ஆகின்றன. கற்பனைப் பீடத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்ட குறிக்கோள் என்னும் சிலை, செயல் துறைக் காற்றுப்பட்டதும் முற்றிலும் துகள்துகளாகிக் காலடியில் விழுந்து விடுகிறது.
துன்பம், துயரம், இன்னாமை ஆகியவற்றுக்கு எதிர் பண்பு இன்பம். துன்பம், துயரம், இன்னாமை ஆகியவற்றிலிருந்து விடுபட விரும்புபவர்கள் இன்பத்தை நாடுகிறார்கள். இது இயல்பே. ஆனால் துன்பத்தின் காரணம் வறுமை என்றும், இன்பத்தின் கருவி செல்வம் என்றும் மட்டுமே அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் செல்வத்தை அடைகின்றனர். சில சமயம் இன்பத்தையும் காண்கின்றனர். ஆனால் துன்ப விடுதலை கிட்டுவதில்லை. எனவே செல்வத்தாலும் இன்ப நாட்டத்தாலும் இன்ப விடுதலை கிட்டாது என்பது தெளிவாகிறது. அப்படி யானால் துன்பத்தினின்று விடுதலை பெற வழியே கிடையாதா? தீமையின் வன்தளையறுத்து நிலையான இன்பம் பெற வழி யாது?