2. அகத்தின் நிழலே புறம்
உன் அகநிலை எப்படியோ, அப்படியேதான் புற நிலை உலகமும் இருக்கும். இயற்கையிலுள்ள ஒவ்வொரு பாருளும் அகத்தோடு சாரும்போது, அக உணர்வின் ஒவ்வொரு கூறாய் அமைந்துவிடும். எனவே, புறப்பொருளின் தன்மைபற்றி நீ ஒரு சிறிதும் கவலை கொள்ள வேண்டிய தில்லை. உன்னைப்பற்றிய வரை, அது உன் அக உணர்வின் ஒரு கூறாகவே இருக்க முடியும்.
நீ
உன் அறிவு முழுவதும் உன் முன்னைய செயலுணர்வின் பயன்.செயலுணர்வு என்னும் வாயில் வழியாகவே அது உன்னை வந்தடைந்தது. இனி நீ அறிய இருக்கும் அறிவும், இதுபோலச் செயலுணர்வு என்ற வாயில்வழி வரவேண்டியதே. ஆனால் அந்த வாயில் கடந்து விட்டபின், அவ்வறிவுகள் உன்னில் ஒரு பகுதியாய், “நீ” ஆகிவிடுகின்றன.
உன் எண்ணங்கள், ஆவல்கள், அவா ஆர்வங்கள் ஆகியவையே உன் உலகம். இயற்கையினமாக இயங்குகிற அழகு, மகிழ்வு, இன்பம் ஆகியவையும் சரி; அருவருப்பு, துயர், துன்பம், ஆகியவையும் சரி, உன்னுள்ளிருப்பவையே; அவை வெளியி லிருந்து வருபவை அல்ல. உன் வாழ்வு, உன் உலகு, உன் இயற்கை ஆகியவற்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் எண்ணங்களே! உன் அக அமைப்பை உன் எண்ணங்கள் ஆற்றல் கொண்டு நீ கட்டமைக்குந்தோறும், அவற்றுக்கியைய உன் வெளிவாழ்வும் புறச்சூழல்களும் அமைந்து உருவாகும். உன் நெஞ்சத்தின் மிக உள்ளார்ந்த ஆழ்தடத்தில் நீ தேக்கிவைக்கும் எண்ணங்கள்கூட ஒன்று விடாமல், சற்று முன்னோ பின்னோ, இயற்கையின் விலக்க முடியாத செயல் எதிர்செயல் ஒழுங்குமுறைப்படி, உன்புற வாழ்வு நோக்கி வளர்ச்சியடைவது உறுதி.