உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

அப்பாத்துரையம் - 43

உன் உடலில் சிறுமைகடந்து நீ செயலாற்றத்தக்க எல்லைகள் பல. சமூகத்தை இயக்கி, நீ அருஞ்செயலாற்றலாம். இது கூட்டுழைப்பாற்றல். கருவிகளை உண்டுபண்ணி நீ ஊர்திகளில், மரக்கலங்களில், வானூர்திகளில் சென்று நிலமும் கடலும் வானும் கடக்கலாம். உயிர்களைப் பெருக்கியும், கருவிகளை முறுக்கியும் நீ இயற்கையின் வளத்தைப் பன்மடங்கு பெருக்கிப் புதுப்பிக்கலாம். இடமும் காலமும் கடக்கும் இதே வகைகளில் போதிய அளவு முயன்றால், நீ உன் வாழ்நாள் எல்லையைக்கூடக் கடக்க முடியாது என்றில்லை. உண்மையில் உன் உள்ளடங்கிய ஆற்றலின் எல்லை, இயற்கையின் எல்லையற்ற எல்லை அல்லது கடவுளாற்றல் தான் என்பதைநீ மறந்துவிடாதே.

-

எல்லா மனிதரும் ஏன், எல்லா எல்லா உயிர்களும் இயற்கையின் உயிராற்றல்; அஃதாவது கடவுளின் கூறுகளே. ஆதலால் உயிர்களின் பெருமை, சிறுமை என்பதெல்லாம் பல தரப்பட்ட படிமுறைகளேயன்றி வேறல்ல. இது உன்தன் மதிப்பையும் உயர்த்த வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் நீ கொள்ளும் மதிப்பையும் உயர்த்த வேண்டும். இந்நிலையை நீ அடைந்தால், எப்படி நீ ஒரு மனிதனை ஓர் உயிரை வெறுக்கமுடியும்? உன் அகரவரிசையில் நன்மை தீமை, அஃதாவது பொதுநலம் நோக்கியபண்பு, அதனின் அகன்ற பண்பு என்ற வேறுபாடு இருக்கமுடியுமே தவிர, நல்லார், தீயவர் என்ற வேறுபாடு இருக்கமுடியாதன்றோ? உன் நண்பர்களிடமும் பகைவர்களிடமும் உண்மை நண்பர்களிடமும் பகைவர் களிடமும் கூட - நீ என்ன வேறுபாடு காட்ட முடியும்? உன் நண்பர்களை நீ அன்புக்கனிவுடன் ஆதரிப்பாய்! உன் பகைவர் களையும் அதே அன்புக் கனிவுடன் நீ பகைமையற்ற உள்ளத்துடன் -எதிர்ப்பாய்! கூடுமானால் நீ ஆதரிக்கும் உன் நண்பர்களிடம் நீ காட்டும் அன்புக்கனிவைவிட, நீ எதிர்க்கும் உன் பகைவர்களிடம் மிகுதியான கனிவைக்காட்டி, அவர் களையும் கூடியவிரைவில் நீ நண்பர்களாக்கிக் கொள்வாய்! தீயவர்களாகத் தோன்றும் அல்லது செயலாற்றும் பகைவர் களும் இங்ஙனம் நல்லவர்களாகி நட்பாடத் தொடங்கிவிடுவர்.

-

-