சமதர்ம விளக்கம்
153
வலிமை வாய்ந்த ஆட்சி அவசியமாகிறது? இதை யார் தொடங்கி வைப்பது? ஒரு தனி மனிதனா? இது நினைக்கப்படாத ஒன்று. மக்களா? அப்படியானால் எந்த மக்கள்? நாட்டு மக்கள் என்பவர்கள் நாம் மேலே கண்டபடி எத்தனையோ பல வகுப்பினர் சேர்ந்தவர்கள். புரட்சிக் காலத்தில் முதலாளித்துவ வகுப்பு அகற்றப்படுகிறது. அதன்பின் இருக்கும் வகுப்புக்கள் குடியானவர் வகுப்பு, உழைப்பு வகுப்பு, அறிவு வகுப்பு முதலிய பல்வேறு வகுப்புக்களே. இவ்வகுப்புக்களின் போராட்கள் புரட்சிக் காலத்தில் ஒன்றுபட்டு ஆட்சிக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் இன்றைய சமூகம் முக்கியமாகத் தொழில் சார்பானது. ஆகவே நேர்மையாகத் தொழில் முன்னேற்றத்தைப் பாதுகாத்து முனைந்து செல்லும் வகுப்பு இயந்திர உழைப்பு வகுப்புத்தான். எனவேதான் இயந்திர உழைப்பு வகுப்பு இம்மாறுபாட்டுக் காலத்தில் அரசியல் காரியங்களுக்குப் பொறுப்பு வகித்துச் செல்லும் தகுதியுடைய வகுப்பு ஆகிறது. அத்துடன் ஆட்சி யொழிந்த வகுப்பின் சக்தியில் கடைசிக் கூற்றின் தடத்தையும் ஒழிப்பதற்காகக் கண்டிப்பான ஆட்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அவ் ஆட்சியை சர்வாதிகார ஆட்சி
என்று கூறவேண்டியதாயுள்ளது.
ஆயினும் ஒரு தனிமனிதனன்றி ஒரு வகுப்பினால் நடத்தப்படுவ தாயினும் சர்வாதிகாரம் விரும்பத்தக்கதன்று. மட்டுமீறி நீண்டகாலம் அது தொடர்ந்தால் ஆட்சியாளர் தங்களைச் சர்வ வல்லமையுடையவர் களென்றே கருதிக் கொள்ளக்கூடும். இது மக்கள் மனப்பண்புக்குக் கேடானதும் இடர்நிறைந்ததும் ஆகும். ஏனெனில் மக்கள் தம் பகுத்தறிவில் ஊன்றுவதில் தவறுவதுடன் செயல்துறையில் அக்கறையும் இல்லாது போவர். இவ்வகைச் சர்வாதிகாரம் ஆபத்தான அரசியல் முறை; அதனைக் கூடியவரை இல்லாமற் செய்ய வேண்டியதே. இது முடியாத இடத்தில் அது கட்டுப்பாட்டுக் குட்படவாவது செய்ய வேண்டும் என்றும் மிக நீடிக்கும்படி விடக்கூடாது.கூடிப்போனால் இயந்திர உழைப்புச் சர்வாதிகாரம் சில நிலைமைகளில் விலக்க முடியாத ஒரு தீமை என்று மட்டுமே கூறலாம்.