2. ஏடு நாடும் இளைஞருக்கு
ஏட்டில் நாட்டஞ் செலுத்தும் எழிலார் கனவாள!
ஏட்டில் கருட்தூன்றி நீ கனவார்ந்து வருகிறாய். செங்கோல் கையில் பிடிக்காமல், அதன் பொறுப்புக்களையும் கவலைகளையும் ஏற்காமல், உலகில் கருத்தியல் செங்கோலாட்சி நடாத்தும் கருத்தியல் வேந்தர்களாகிய நூலாசிரியர்களுள் நீயும் ஒருவனாகலாம்; அல்லது அவ்வேந்தர்களுடன் மறையுறவாடி மாந்தரிடையே அவற்றறிவையும் அவ்வறிவாட்சியையும் பரப்ப உதவும் கருத்தமைச்சனாகலாம். அல்லது வாழ்க்கைத் துறையில் உன் தொண்டுகளிடையே ஓய்வுற்ற நேரத்தை அவ்வறிவாட்சி யாளர் தொடர்பில் விட்டு வைத்து, உன் வாழ்க்கைப் பணிக்கும் உனக்கும் உயர்வும், இன்பமும், பயனும் தேடிக் கொள்ளலாம். இம் மூன்று பகுதிகளில் நீ எதைத் தேர்ந்தெடுத்தாலும் நன்றே; ஏனெனில் மூன்றும் ஒரே துறையின் மூன்று படிகள்தாம். நூலை எழுதுவது ஆசிரியர்; ஆனால் எழுதப்படுவது வாசகர்கட்காகவே. அதைப் பயன்படுத்துவது உலகம். இம் மூன்று படிகளில் எந்தப் படியில் நீ நின்றாலும், அடுத்த படிக்கு அஃது ஒரு முன்வீடே. அத்துடன், அஃது அதற்கடுத்த படிக்கு உதவியாகவும், அதன் நிறைவாகவும் அமைந்துள்ளது. மூன்றாம் படியாகிய ஆசிரியர் திறம் அருமையானதே. ஆனால் அதன் வேரும் ஆதாரமும் நோக்கமும் முதற்படிநிலையே.
ம் முத்திறத்திற்குரிய எல்லா ஏட்டுக் காதலருக்கும் நோக்கமும் தகுதியும் ஒன்றே. ஒரே ஆர்வம் அவர்களை இணைக்கிறது. அவ் ஆர்வத்துட்படாதவன் பொழுது அவப்பொழுதேயாகும். ஏட்டுக் காதலருள் தலைசிறந்த ஒருவர் ஜான் ரஸ்கின். அவர் ஒரு சிறுமிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறித்த வாசகம், ஏட்டின் பக்கம் நாட்டம் செலுத்தாது அவப்பொழுது போக்கும் பலருக்குச் சிறப்பாகப் பெண்டிருக்கு