112 ||
அப்பாத்துரையம் - 5
கணக்கராக இருந்த அரியநாதரும் வருவதைக் கேள்வியுற்றார். அவர் அடைந்த கோபத்திற்கு அளவில்லை; உடனே தம் படைகளைத் திரட்டிப் போருக்குத் தயாராக இருந்தார். அந்த வேளையில் விசுவநாதரும், அரியநாதரும் தம் பெரும் படையுடன் மதுரையை அடைந்தனர். தந்தைக்கும், தனயர்க்கும் போர் மூள இடந்தரலாகாது என்பது அரியநாதர் விருப்பம். அதனால் அவர் சமாதான வழியின் நாகமரைச் சரிப்படுத்த முயன்றார். அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆதலின் இருதிறத்துப் படைகளும் போர்புரியத் தொடங்கின.
கடும் போர்
நாகமர் பக்கம் இருந்த படைவீரருள் பாதி எண்ணிக்கை உடையவர், முன்னர் அவருடன் விஜயநகரத்திலிருந்து வந்தவர்; மற்ற பாதியினர் தமிழர். விசுவநாதருடன் வந்தவர் அனைவரும் பாண்டிய நாட்டிற்கே புதியவர்; சிறந்த பீஜப்பூர்ச் சுல்தான் படைகளை முறியடித்த வீரர்கள். அதனால் அவர்கள் மிக்க திறமையுடன் போர் செய்தனர். விசுவநாதர், தாம் தம் தந்தையாருடன் போரிடுவதை மறந்தார்; எதிரி அரசன் ஒருவனுடன் போரிடுவதாகவே எண்ணிக் கடும் போர் புரிந்தார். விசுவநாதர் உண்மையான வீரம் காட்டிப் போர் புரிதலைக் கண்ட அவருடைய வீரர்கள் உற்சாகம் கொண்டு கடும்போர் புரிந்தனர். போரை விரைவில் முடிக்க விரும்பிய அரியநாதர் வீரரை உற்சாகப்படுத்தினார். அவர் நாகர் சேனையைச் சின்னாபின்னப் படுத்தினார். நாகமர் படை கதிகலங்கி ஓட்டம் எடுத்தது. மஹா மண்டலேசுவரர் ஆகிய நாகமரை அவர் தவப்புதல்வரான விசுவநாதர் சிறைப் படுத்தினார்.
வருந்தத்தக்க காட்சி
விசுவநாதர் தம் தந்தையாரைச் சிறைப்படுத்தும் பொழுது, “எந்தையீர், என்னை மன்னித்து ஆசீர்வதிக்க வேண்டும். நான் அரசர் ஆணைப்படி இங்கு வந்தவன். நான் அரசர் ஆணையை நிறைவேற்றுகிறேன்" என்று கூறிக் கண்ணீர் விட்டார். நாகமர் தம் தவற்றை எண்ணிக் கண்ணீர் உகுத்தார். இவர்கள் வருத்த நிலையைக் கண்டு அரியநாதர் வருந்தினார்.