உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(278

அப்பாத்துரையம் - 5

மாதவராவ் இப்படத்தைக் கண்டு அதன் கருத்தெல்லை கடந்த கவிதை வெள்ளத்தில் சொக்கிப் போனார். கலைச்சுவை வல்லாராகிய அவர் அதனை உடனே விலை கொடுத்து வாங்கித் தமதாக்கிக் கொண்டார். தாம் மதித்துத் தேர்ந்த இப்படத்தின் அருமையை உலகம் அறியச் செய்யவேண்டுமென்று நினைத்த இக் கலையன்பர் அதை 1880-ல் நடைபெற்ற பூனாக் கலைப் பொருட்காட்சிக்குத் தம் சார்பிலேயே அனுப்பிவைத்தார்.

பம்பாய் மாகாண ஆட்சியாளர் ஸர் ஜேம்ஸ் ஃவெர்குஸன் கலைக் காட்சியைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தார். இரவிவர்மாவின் படம் அவர் கண்களைக் கவர்ந்தது. அவரும் ஸர்.டி.மாதவராவைப் போலவே உடனே அதை வாங்கித் தமதாக்க ஆர்வங்கொண்டார். ஆனால், அது முன்பே ஒருவரால் வாங்கப்பட்டு விட்டது என்று அறிந்ததும் அவர் ஏமாற்ற மடைந்தார். ஆயினும் அவர் கலைஞன் முகவரியறிந்து அவருக்கு எழுதி அதன் மறுபடி ஒன்று தீட்டித் தரும்படி கோரினார். இரவிவர்மா அவர் கோரியவண்ணமே வேறு பகர்ப்புப் படம் தீட்டி ஆட்சியாளருக்குப் பரிசளித்தார். ஆட்சியாளர் மன மகிழ்ந்து அவர் கலையைப் பாராட்டி அப்படத்துக்கு எதிராக ஆங்கில நாட்டு மன்னர் குடும்பத்தின் நிழற்படங்களடங்கிய ஒரு படக்கோவையை வழங்கினார்.

புராண காவியப் படங்கள் எழுதுவதில் இரவிவர்மாவுக் கிருந்த தனிப்பெருஞ் சிறப்பு இதன்மூலம் அகலுலகெங்கும் பரந்தது. இதுமுதல் மன்னரும் பெருமக்களும் வெள்ளையன்பரும் அவர் கலையுழைப்பைப் பெற ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு போட்டியிடலாயினர். கலைமன்னரைப் போற்றும் மரபில்வந்த புவிமன்னர்கள் புவிமன்னர் மரபுக்குரிய இக் கலைமன்னரைப் போற்றித் தம் புகழ் நிறுவ முன்வந்தனர். ஆனால், மன்னருக்காகக் கலைஞர் வரைந்த இப் படங்களே மன்னர் கடந்து மன்பதையின் ஆர்வத்தைத் தூண்டவல்லவையா யிருந்தன என்பது வியந்து பாராட்டுதற்குரியது.

தென்னாட்டிலேயே கலைவளர்த்த முதல்தர மன்னர்களில் முதல் வரிசையில் இடம்பெறத் தக்கவர் அக்கால மைசூர் மன்னர் ராமராஜேந்திர உடையார் ஆவர். இசையிலும், ஓவியத்திலும் அவர் அயரா ஆர்வம் உடையவர். அவர் அழைப்புக்கிணங்க