உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 121

இந்தியாவினுள்ளே நுழைய வேண்டுமென்ற எண்ணமும் நிறைவேறாது போய்விடும்.

இந்திய விடுதலைப் போரின் அடித்தளம் கிழக்காசியா. அதிலும் பர்மா முதன்மையானது. இந்த அடித்தளம் பலமுள்ளதாக இருந்தால்தான், போர் முனையிலுள்ள துருப்புகள் வெற்றி பெற முடியும். உள்நாட்டின் நிலைமையும் நன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டும். நம்மை எதிர் நோக்ககியிருக்கும் மாதங்களில், போர் முனையிலும் இந்தியாவிலும் புரட்சியை உண்டு பண்ணுவதிலேயே முழுக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அந்த வேலைக்காக நானும் யுத்த சபையிலுள்ள எனது சகாக்களும் செல்ல நேரிடலாம். அப்பொழுது நீங்கள் இங்கே செய்ய வேண்டிய வேலைகளைக் குறைவின்றிச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் எங்களைப் பூரண திருப்தி செய்வீர்களென நம்புகிறேன்.

நமது பகைவனின் பிரச்சாரத் தந்திரங்கள் உங்கட்கு நன்றாகத் தெரியும். அந்தத் தந்திரங்கள் நமக்கு விரோதமானவை மட்டுமல்ல; வேடிக்கையுங் கூட. முதன் முதலில் நம் ராணுவம் ஒன்றிருப்பதையே அலட்சிய் செய்தார்கள். பின்னர் அதை அங்கீகரிக்காமலிருக்க அவர்களால் முடியவில்லை. அரக்கானில் அவர்களுக்கு நாம் கொடுத்த உதை, அந்த அலட்சிய புத்தியை ஒழித்து விட்டது. நாம் இந்தியாவுக்குள் நுழைய முடியாதென்று கதறியதெல்லாம், நாம் மணிப்பூர் – அஸ்ஸாம் எல்லைகளிலும் நுழைந்ததும் உலகத்தாரிடம் செல்லாக் காசாகி விட்டன. இந்த அவமானத்தால் நம் பகைவர்களும் அவர்களுக்குத் துணையாக நின்று கூலிக்கு மாரடிக்கும் நமது சோணகிரிகளும் சித்தம் கலங்கி வாயில் வந்தபடி உளர ஆரம்பித்தனர். இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? நமது இராணுவம் ஓர் பொம்மலாட்டமாம்! நாம் டில்லிக்குச் செல்ல முடியாதாம்! மணிப்பூரிலிருந்து டில்லிக்கு வெகு தூரம் இருக்கிறதாம்! இந்தியப் பூகோள நூல் நமக்குத் தெரியாதென நினைத்து விட்டார்களோ, என்னமோ? அவர்களை விட நமக்குத்தான் நன்றாகத் தெரியுமே! மணிப்பூரிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ, அதைவிட அதிக தூரத்தை நம் படைகள் இதுவரை கடந்து விட்டன.