உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
174 ||

அப்பாத்துரையம் - 6




இந்நிலையில் ஹைதர் மரபைப் பெருமைப்படுத்த எண்ணிய இஸ்லாமிய வரலாற்றாசிரியர், அவன் குடிமரபின் பழமையை லாகூருக்கும் பாக்தாதுக்கும் கொண்டு சென்று, அதன்மீது அயல்நாட்டுப் பழமைப் புகழொளி பரப்ப முயன்றுள்ளனர்.

இம்முயற்சி முழு வெற்றி காணவில்லை. ஏனென்றால், பாட்டன் முப்பாட்டன் கடந்து குடி மரபுப் பட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துவரவில்லை.

ஒருசாராரின் குலமரபுக் கொடியின்படி, ஹைதரின் தொலைமுன்னோன் ஹஸன் என்பவன். இவன் இஸ்லாமியரிடையே புகழ் முதன்மை பெற்ற 'குரேஷ்' குடியினன். இன்றைய ஈராக்கின் பழங்காலத் தலைநகரான பாக்தாதிலிருந்து, சிந்து வெளியிலுள்ள ஆஜ்மீருக்கு வந்து அங்கே குடியேறியவன். அவன் புதல்வன் வலிமுகம்மது தன் சிற்றப்பனுடன் மனத்தாங்கல் கொண்டு, தென்னாட்டிலுள்ள குல்பர்கா நகருக்கு ஓடிவந்தான். அவன் மகனே ஹைதர் அலியின் பாட்டனான அலிமுகமது.

மற்றொரு கூற்றின்படி, முதல் முன்னோன் முகமது பாய்லோல் என்பவன். இப்பெயர் மொகலாயருக்கு முன் தில்லியை ஆண்ட லோடி மரபினரின் பெயரை நினைவூட்டுவது. அவன் தன் புதல்வர்கள் வலிமுகமது, அலிமுகமது என்பவர்களுடன் பாஞ்சாலத்திலிருந்து பிழைப்புக்காக குல்பர்கா வந்து சேர்ந்தான். முந்திய மரபில் அலிமுகமதுவின் தந்தையாகக் காணப்பட்ட வலிமுகமது, இம்மரபில் அவன் தமையனாகத் தோற்றமளிக்கிறான்.

ஹைதர் குடிமரபில் அலிமுகமதுவுக்குப் பின் குளறுபடி எதுவும் இல்லை. ஆகவே அலிமுகமதுவின் கால முதலே குடிமரபு வரலாறு மெய்யானது என்று கொள்ளலாம்.

அலிமுகமது கல்வி கேள்விகளில் வல்லவன். இப்புகழ் குல்பர்கா நகரில் அவன் மதிப்பை உயர்த்திற்று. அந்நகரில் வாழ்ந்த சயித்பர்ஸா முன்ஷி என்ற சமயத் துறைப் பெரியாரின் புதல்வியை அவன் மணம் செய்துகொண்டான். குல்பர்காவில் ஏற்பட்ட ஆட்சி மாறுதல் காரணமாக, அவன் அந்நகரைவிட்டு வெளியேற நேர்ந்தது. அவன் மைத்துனர்கள் ஏழுபேர் இருந்தார்கள். ஏழு பேருமே பீஜப்பூர் சுல்தானிடம் படைத்துறை அலுவலில்