உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 181

மட்டுமல்ல; அது அரசியல் விடுதலை வாழ்வை மட்டுமின்றி, தென்னகத்தின் பொருளியல் வாழ்வையும், கலை வாழ்வின் பெருமையையும் அழித்தது என்பதே.18-ஆம் நூற்றாண்டு வரை உலகில் இத்துறைகளில் போட்டியற்று முதன்மை நிலை அடைந்திருந்த தென்னாடு, 19, 20-ஆம் நூற்றாண்டுகளுக்குள் உலகில் மட்டுமல்ல; கீழ்த்திசையில்கூடக் கடைப்பட்ட நாடாயிற்று. அதன் முதன்மைநிலை தடம் இல்லாது அழித்தொழிக்கப்பட்டது.

ஹைதரின் பெருமை அவன் விடுதலை வாழ்வு சரியாமல் காக்க முயன்றான் என்பது மட்டுமல்ல; விடுதலை சரிவுறும் காலத்திலேயே புதிய விடுதலைக்கு அடிகோலினான் என்பது மட்டுமல்ல; அவன் முழுப்பெருமை இவை கடந்த ஒன்று. அவன் தென்னகத்தின் பொருளியல் சரிவு கண்டு, அதைத் தடுக்க அரும்பாடுபட்டான் என்பதே.

ஹைதர் அரசியல் வாழ்வில் நுழைவதற்கு முன்பே நிஜாமும் ஆர்க்காட்டு நவாபும் விடுதலை வாழ்வின் சரிவு நோக்கிச் சறுக்கத் தொடங்கிவிட்டனர்.

நிஜாம் அரசை முதல் முதல் நிறுவியவன் மீர் கமருத்தீன் என்பவன். அவன் தந்தை மொகலாயப் பேரரசின் கீழ் கூர்ச்சரத்தின் மண்டலத் தலைவனாயிருந்தவன். அவன் பாட்டன் ஆஜ்மீர் மண்டலத் தலைவனாயிருந்தவன். ஆனால், அவுரங்கசீப்பின் ஆட்சியின் பின் மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கியபோது, அவன் தென்னகத்தில் தனியாட்சி நிறுவி 1713 முதல் 1748 வரை நிஜாம்உல்முல்க் என்ற பட்டப் பெயருடன் தென்னக முழுவதும் மேலாட்சி நிறுவினான்.

அவனுக்குப் பின் அவன் இரண்டாம் புதல்வனான நாஸிர்ஜங்கும், மகள் பிள்ளையான முசபர்ஜங்கும் நிஜாம் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். தென்னாட்டின் விடுதலை வீழ்ச்சிக்கு இந்நிகழ்ச்சியே வித்திட்டது.

நிஜாமைப்போலவே ஆர்க்காட்டில் தனியாட்சி நிறுவி 1710 முதல் 1732 வரை சாதத்துல்லாகான் நவாபாக ஆட்சி செய்தான். அடுத்து வந்த நவாப் தோஸ்த் அலிகான் மைசூர்மீது படையெடுத்து, அப்போது மைசூரை ஆண்ட சிக்க கிருஷ்ண-