உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. முன்னணி வீரர்

“பெருந்தகைத் தலைவர் நேத்தாஜி”

இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரர் எண்ணற்றவர். இந்திய மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்க்கு அவர்களை விடுதலை நோக்கி நடத்திச் சென்ற தளபதிகளும் பலர். தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திரபோஸ் அவ்வீரர்களுள் ஓர் ஒப்பற்ற வீரர்; அத்தலைவர்களுள்ளும் தளபதிகளுள்ளும் முன்னணியில் வைத்தெண்ணத் தக்க தலைமைத் தளபதி. இந்தியா உள்ளளவும் அவர் புகழை மக்கள் என்றும் மறக்க முடியாது. இதனை உணர்ந்தே இந்தியப் பெருமக்கள் தலைவர் களிடையேயும் அவரைச் சிறப்பித்துத் தலைவர் பெருந்தகை நேதாஜி என்று அழைத்தனர்.

‘தோன்றில் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாய் மொழிக்கு இலக்கான வாழ்வு உடையவர் தலைவர் பெருந்தகை போஸ். அவர் புகழ் அவர் பிறந்த தேசமாகிய இந்திய மாநில மெங்கும் நிரப்பி, ஆசியா கண்டமெங்கும் பரவி, உலகிலேயே பேரொளி வீசியுள்ளது.

போஸ் முன்வைத்த காலைப் பின்வையாத வெற்றி வீரர். தோல்வி என்பது இன்னது என்பதையே, அச்சம் என்பது ன்னது என்பதையோ அவர் அறியமாட்டாதவர்.நெப்போலியன் என்ற ஃபிரஞ்சு நாட்டுப் பெருவீரர் தம் அகராதியில் செயற்கரியது என்ற சொல்லே கிடையாது என்றாராம்! இந்தியாவின் நெப்போலியனான போஸ் வாழ்க்கை அகராதியிலும் அச்சொல் இடம் பெறவில்லையெனலாம்.