உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. புலியின் பதுங்கலும் பாய்தலும்

மைசூரின் அரசியல் பொறுப்பை ஹைதர் ஏற்பதற்கு முன்னிருந்தே, மைசூரின் அமைதிக்கு மராட்டியப் பேஷ்வா மரபு ஒரு பெரிய வில்லங்கமாய் அமைந்தது. ஹைதரின் ஆட்சியில் மைசூர் செல்வ வளம் கொழித்த நாடாக வளர்ந்து வந்ததே இதற்குக் காரணம். இச்செல்வம் கொள்ளைப் பேரரசாகிய பேஷ்வா கால மராட்டியத்தின் பண ஆசையைத் தூண்டிற்று. தம்முடன் ஒத்த பேரரசராகிய நிஜாமை எதிர்க்க விரும்பாது அவர்கள் அடிக்கடி தெற்கே பார்வை செலுத்தியதன் காரணம் இதுவே.

எத்திசையிலும் வெற்றி நாட்டிய ஹைதர், மராட்டியரிடம் மட்டும் அடிக்கடி பணம் கொடுத்தே ஒப்பந்தம் செய்ய வேண்டி வந்தது. ஒவ்வொரு சமயம் கடுந்தோல்விக்கும் ஆளாக வேண்டி வந்தது. ஆனால், இதற்கெல்லாம் வரலாறு இரண்டு காரணங்களையே கூற முடியும். மராட்டியப் படை தொகையில் மைசூர்ப் படையைவிட எப்போதும் பன்மடங்கு பெரியதாயிருந்தது. அத்துடன், கொள்ளையிடும் ஆர்வம் அப்படையின் அழிவாற்றலைப் பெருக்கிற்று.நாட்டு மக்கள் படை எதுவும் அதே அளவு துணிச்சலைக் காட்ட முடியாதிருந்தது. அத்துடன் சூழ்நிலையறிவும் தொலை நோக்கறிவும் உடைய ஹைதர் மராட்டியரை எதிர்க்குமுன், தென்னக அரசியல் புயலில் அசையா உறுதியுடைய ஓர் அரசை நிலைநாட்டிட விரும்பினான். மராட்டியருடன் போராடித் தன் ஆற்றலைச் சிதறடிக்க விரும்பவில்லை. அவர்களுடன் அவன் இறுதியாகத் தொடுத்த மூன்று போர்கள் இந்த உண்மையை நன்கு விளக்குகின்றன. முதற் போரில் அவன் படுதோல்வியுற்றான். ஆனால், அடுத்த போர்களால் இத்தோல்வி புலியின் ஆற்றல் மிக்க பாய்ச்சல்களுக்கு முந்திய பதுங்கல் என்பது தெளிவாயிற்று.