4. அரசியல் பணி ஈடுபாடு
காந்தி ஊழி: போஸ் வாழ்வு
இந்திய அரசியல் வாழ்வில் 1918-க்கும் 1948-க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தையும் காந்தி ஊழி என்றழைப்பதுண்டு. இந்தியாவில் இவ் ஊழி தொடங்குமுன் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் தமிழரிடையேயிருந்து சத்தியாக்கிரகம் செய்து வெற்றிப் புகழ் கண்டிருந்தார்.1918-இல் இந்திய அரசியல் வானில் அவர் ஒரு கதிரவன் போல் தோன்றி 1930-ஆம் ஆண்டில் தம் புகழின் உச்ச நிலைக்கு வந்து 1940-க்குப் பின் உலகெலாம் போற்றும் 'செக்கர் வான்' புகழுடன் விளங்கி 1948 ஜனவரியில் தேசத்தின் பிற்போக்குச் சக்திகளால் நெருக்குண்டு மறைவுற்றார். இதே காந்தியூழியில் சுபாஷ்போஸ் இந்திய வாழ்விடையே வால் வெள்ளிபோல் திடுமெனத் தோன்றி வளைந்தோடிக் கோடி ஞாயிற்றொளியுடன் ஒளி வீசி,1942-இல் மக்கள் கண்ணையும் கருத்தையும் பறித்துக் கொண்டு மங்காப் புகழுடன் மாயமாக மறைந்தனர். அவர் புகழின் முழு அளவை நாம் இப்போதுதான் படிப்படியாகவே அறிந்து வருகிறோம். அங்ஙனம் அறிய அறிய அவர் காலங் கடந்த வீரர் என்பதை உணர்கிறோம். ஏனெனில் சாதாரண மக்களைப்போல் அவர் வாழ்க்கையில் நீரோட்டத்தில் மிதந்து சென்றவரோ, அல்லது பெரும்பான்மை வீரர்களைப் போல் குறுக்காக வெள்ளத்தைக் கடந்து புயல்களையும் ஒருங்கே எதிர்த்துச் சென்று எதிர் நீச்சுப் பழகிய ஒரு சில வீரப் பெருந்தகைகளுள் அவர் ஒருவர்.
போஸ் வாழ்வின் மூன்று பகுதிகள்
காந்தியடிகளின் வாழ்க்கையைப் போல் போஸின் வாழ்க்கையையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற்பிரிவு காங்கிரஸ் தலைவர்களுடன் தலைவராக நின்று அவர் அதன்