உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

147

ஜெர்மனியில் ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்ற குரல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத புதுப்பொருளில் எங்கும் எழுப்பப்பட்டது. அறிவியல் துறையில்கூட ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பிற நாட்டார் இருக்கக் கூடாது என்பது அதன் முதல் தொனியாக இருந்தது. மேலும் ஜெர்மானியர் என்ற சொல் ஆரிய இனத்தவர் என்ற பொருளில் வழங்கப்பட்டு, யூதரை விலக்கிற்று. இறுதியில் அது படிப்படியாக யூதரையும் அவர்களை எதிர்க்காத வரையும் உள்ளடக்கி விரிவுற்றது. புதிய போர்வெறிப் போக்கை ஆதரிக்காதவர் களையெல்லாம் அது நாளடைவில் விலக்கி வைக்கக் கங்கணம் கட்டிற்று.

பிரஷ்யக் கலைக்கூடப் பதவி துறப்பு

பிரஷ்யக் கலைக்கூடத்தில் தன் நிலைபற்றி அறிய ஐன்ஸ்டீன் முதலில் உள்ளங்கொண்டார். நியூயார்க்கிலுள்ள ஜெர்மன் தூதர் நிலையத்தை அணுகினார். அந் நிலையத்தவர்கள் மூலம் அவர் எத்தகைய தெளிவும் அடைய முடியவில்லை. இறுதியில் 1933-இல் அவர் பெல்ஜியத்தில் வந்து தங்கிய வண்ணம், பெர்லின் நண்பர் களுடன் கடித மூலம் தொடர்புகொண்டார்.

ஜெர்மனியின் புதிய அரசியலின் போக்கில் அவர் நம்பிக்கை கொள்ள எதுவும் நேரவில்லை. அவநம்பிக்கையே வளர்ந்து வந்தது. புதிய அரசியல் பதவி வகிக்கும்வரை ஜெர்மனிக்குப் போக முடியாது என்ற உறுதியுடன் அவர் பிரஷ்யக் கலைக்கூடத்திலுள்ள தம் உறுப்பினர் பதவியைத் துறந்து கடிதம் எழுதினார்.

ஐன்ஸ்டீன் நண்பர்கள் புதிய அரசியல்போக்கை எதிர்க்காமலே, மனித உணர்ச்சி காட்ட எண்ணி வாதிட்டுப் பார்த்தனர்.ஆனால், பொதுமக்களிடையிலும் பத்திரிகைகளிலும் ஐன்ஸ்டீன் எதிர்ப்பே ஜெர்மன் தேசீயமாகப் பரப்பப்பட்டு வந்தது. அவர் பிற நாடுகளுடன் ஊடாடிய ஜெர்மனிக்கெதிராக விளம்பரங்கள் செய்தார் என்றே குற்றம் சாட்டப்பட்டது. நண்பர்கள் இதன்பின் அவரை ஆதரிக்கத் துணியவில்லை.

பல்கலைக்கூட நண்பர்கள் மனம் புண்படாதபடி செயலாற்ற ஐன்ஸ்டீன் விரும்பினார். ஆகவே, அவர் தாமாகப் பல்கலைக் கூடத்திலுள்ள தம் உறுப்பினர் பதவியைத் துறந்துவிடுவதாகக் கடிதம் வரைந்தார்.