226
அப்பாத்துரையம் 7
அவர் கலவரமே எனக்கு நெஞ்சுரம் தந்தது. நான் ‘சரி’ என்று தலையாட்டினேன்.
அவர் என்னை உள்ளேவிட்டு அறையை வெளியேயிருந்து பூட்டிக்கொண்டு சென்றார்.
ராச்செஸ்டர் நாட்கணக்கில் திரும்பிவராதது போல் எனக்குத் தோன்றிற்று. ஆனால், உண்மையில் அவர் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே வந்துவிட்டார். அந்த அறைக்கும் கிரேஸ்பூலின் அறைக்கும் இடையே ஒரு சிறு கதவு இருந்தது. அதன் பின்புற மிருந்து கட்டுண்ட புலிபோல யாரோ நடக்கும் அரவம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்துடன் அவ்வப் போது நான் முன்பு கேட்டிருந்த அதே பேய்ச் சிரிப்பும் செவிப்புலனுக்கு எட்டிற்று. 'கிரேஸ்பூல்தான் மற்றொருமுறை ராச்செஸ்டரைத் தாக்க எண்ணி ஆளடையாளம் தவறித் திரு. மேஸனைத் தாக்கி இருக்க வேண்டும்' என்று எண்ணினேன்.
திரு. ராச்செஸ்டர் வந்ததும் நான் அகலநின்றேன். மருத்துவர் காயங்களுக்கு மருந்திட்டு, உடல் தெம்புவர ஒன்றிரண்டு ஊசிகள் இட்டார். திரு. மேஸன் எழுந்திருந்தாலும் தன் உயிருக்கு மிகவும் அஞ்சியதாகத் தோன்றிற்று, 'நான் பிழைக்கப் போகிறேனா?" என்று கேட்டார். மருத்துவர். “அது பற்றி அச்சமில்லை. ஆனால் காயம் ஆற நாட்செல்லும். கையில் கத்தியின் வெட்டு அல்லாமல், சிதைவு வேறும் ஏற்பட்டிருக்கிறது.” என்றார்.
நான் ஒரு குத்துக்குமேல் குத்துவிடாமல் “கையைப் பிடித்துக் கொண்டபோது, அவள் அதே காயத்தின் மீது வன்மையாகக் கடித்துவிட்டாள். பல்லின் நச்சுத்திறம் என்ன செய்யுமோ என்று அஞ்சுகிறேன்.” என்றார் திரு. மேஸன்.
"இனி அச்சமில்லை. மருந்து அதைத் தடுத்துவிடும். நீங்கள் நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்." என்றர் மருத்துவர்.
திரு. ராச்செஸ்டர் திரு. மேஸனை வண்டியிலேற்றி, “நீர் அமெரிக்கா சென்று இதையெல்லாம் விரைவில் மறந்துவிடுவீர்; இப்போதே கப்பலுக்கு நேரமாகிவிட்டது. போய் வாருங்கள், என்று அனுப்பினார். அவருடன் சென்ற நண்பர் காட்டரிடமும் அவரை நன்கு கவனித்துக் கப்பலேற்றும்படி கூறினார்.