ஜேன் அயர்
255
தூயதிரு. ஜான், தூயதிரு. உட்டைப் போன்ற ஒரு சமயப்பணி முதல்வர். மக்கட் பணியாகிய கடவுட் பணியையும் சமயப்பணிவுடன் ஒன்றுபடுத்தியவர் அவர். அவருடைய நண்பர்களுள் என் திருமணத்தை வந்து தடுத்தவரும், என் பெரிய தந்தையின் வழக்குரைஞருமான திரு.பிரிக்ஸ் ஒருவர். இது எனக்குத் தெரியாது. திரு. பிரிக்ஸ் அவருக்கு எழுதிய கடிதங்களில் அடிக்கடி ஜேன் அயர் என்ற ஒரு பெண்ணைத் தான் எங்கும் துருவித் தேடி வருவதாகவும் அவளிடம் அவளைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தி கூற வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். திரு. ஜானே, தம்முடன் ஊர் பேரில்லாத ஜேன் எலியட் பெயரைத் தாம் கேட்டதில்லை என்றும் மறுமொழி எழுதியிருந்தார்.
ஒரு நாள் திரு. ஜான் இதை என்னிடம் கூறினார். “இது வரை நீங்கள் தாம் ஜேன் அயராயிருக்கக் கூடும் என்று நான் எண்ணாமல் போனேன். எண்ணியிருந்தால் நண்பர் கோரிய செய்தியில் தக்க தகவல் கூறியிருப்பேன்," என்றார்.
அவர் கூறும் செய்தி, திரு.ராச்செஸ்டரைப் பற்றியதாகவே இருக்கவேண்டும் என்று மதித்து நான், "நானும் நீங்கள் கூறப்போகும் செய்தியைக் கேட்க ஆவலுடையவளாகத்தான் இருக்கிறேன். அது திரு. ராச்செஸ்டரைப் பற்றியதுதானே! என்றேன்.
"ராச்செஸ்டரா? அப்படி ஒரு பெயரைப்பற்றி நான் கேள்விப்படவில்லை. என் செய்தி அது பற்றியதன்று. அஃது உங்கள் பெரியப்பாவைப் பற்றியது. என் நண்பர் பிரிக்ஸ் அவருடைய வழக்குரைஞர், அவர் தம் செல்வம் முழுவதை யும் உங்களுக்கே உரிமையாக்கி வைத்துவிட்டுச் சில மாதங்களுக்கு முன் இறந்துபோனார். நீங்கள் இப்போது எங்களுள் ஒருவர் அல்லர். உங்கள் பெயருக்கு இப்போது நாணயமாக 20,000 பொன் பொருளகங்களில் கிடக்கிறது," என்றார்.
"அப்படியா? இருபதினாயிரம் பொன்னா? எனக்கா?”
“ஆம் உங்களுக்குத்தான் ஐயம் வேண்டா?”