உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

16


மான்பார்த்தல் போலென்னைப் பார்க்கும் மாதே!
மலைநிலத்துச் சந்தனமே! குறிஞ்சிப் பூவே!
நான்வானம்; நீஎனக்கு நிலவு! கண்ணே!
நான்தான்நீ! நீதான் நான்! இதனைக் கேளாய்;
"தான்நீஎன் னும்சொல்லே காலப் போக்கில்
தாலியெனத் திரிபுற்ற தென்கின் றார்கள்.
ஏன்பெண்ணே! நீஎன்ன சொல்லு கின்றாய்?”
எனக் கேட்டான். "இவ்விளக்கம் சரிதான்" என்றாள்.

காலையிலும் மாலையிலும் மற்றும் எந்தக்
காலத்தும் மலர்கின்ற காதற் பூவே!
தாலமென்றும், புல்லென்றும், பெண்ணை என்றும்,
தாளியென்றும் நீள்பனையைச் சொல்வதுண்டு.
தாலமென்னும் ஒலையினால் அந்த நாளில்
தாலிசெய்தார்; மங்கலநூல் வேலி செய்தார்.
மாலையிட்டுப் பனையோலைத் தாலி கட்டும்
வழக்கமிங்கு நெடுங்காலம் இருந்த துண்டு.

ஒலைகொண்டு தாலிகண்ட தமிழர், பின்னர்
ஒன்றினைவிட் டொன்றுபற்றக் கருதி, ஓலைத்
தாலிவிட்டார். புலிப்பல்லைத் தொங்க விட்டார்;
தங்கத்தைப் பின்வந்தோர் தங்க விட்டார்.
மாலையிட்டான் மாலையிட்டாள் என்ப தோடு
மணப்பந்தல் விழாநிகழ்ச்சி முடிதல் வேண்டும்.
ஏலக்காய் போன்றவளே! என்றான் வள்ளல்.
"என்கருத்தும் இதுவேதான்" என்றாள் வஞ்சி.