உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

32



தேரிலுள்ள சக்கரங்கள் மற்றோர் பக்கம்
திரும்புதல்போல் அவள்திரும்பி, அவனை நோக்கி
ஊரிலுள்ள நிலமதனை அளந்த கோலை
உலகளந்த கோலென்று சொல்வர். இங்கே,
நேரிலுங்கள் பேரழகை அளக்கும் கண்ணை
நீலமணிக் கோலென்று சொன்னால் என்ன?
பாரிலுள்ள செல்வத்தால் பசியா தீரும்?
பாருங்கள் வாருங்கள் அருகில் என்றாள்.

ஆர்த்தெழுந்து முன்னேறும் அலையைப்போன்றாள்
அருள்தாயு மானவனை நோக்கிப், பொன்னால்
வார்த்தமுகம் திருவரங்கப் பெருமாள் கோயில்
வாசலிலே உள்ளமுகம். ஊடிக் கூடி
வேர்த்தமுகம் எனதுமுகம் எனினும் இந்த
விதவைமுகம் அழகுமுகம்; முன்பே நீங்கள்
பார்த்தமுகம் இந்தமுகம்: விதவை என்னும்
பழம்பொருள்நான் எனினுமிளம் பொருள்நா னன்றோ?

காய்ந்துலர்ந்த வெற்றிலையைத் தரினும், மக்கள் கைநீட்டி
அதைவாங்க மறுப்ப தில்லை.
பாய்ந்தோடும் கலைமானின் காது போன்ற
பச்சையிளம் வெற்றிலையா யிற்றே நான்தான்.
வாய்சிவந்தே இருந்தாலும், தாம்பூ லத்தால்
வாய்சிவக்கக் கூடாதா? உங்கள் பக்கம்
சாய்ந்திருக்கும் இம்மரத்தில் ஏறி ஒடத்
தயங்குவதேன்? இவ்வாறு தயங்க லாமா?