அமுதும் தேனும்
78
அலையாடும் கங்கைநதி ஓரம் தன்னில்
அம்மன்னன் மிகச்சிறிய குடிசை ஒன்றில்
நிலையாகத் தங்கியபின், நீதி நூலின்
நிழலானான். கர்வத்தைக் கரைக்க லானான்.
மலஞ்சார்ந்த உடல்தழுவி மகிழும் இன்பம்
மற்றபல இன்பங்கள் இணைந்தி ருக்கும்
உலகத்தில் நாட்டததைச் செலுத்தி டாமல்
உணர்ச்சிகளை ஒடுக்கியன்னோன் ஒடுங்கி வந்தான்.
அன்றாடம் தவஞ்செய்தான். நோன்பு நோற்றான்.
அக்பரைப்போல் சிறுபொழுதே உறங்கி வந்தான்.
மன்றத்தில், அரண்மனையில், வீற்றி ருந்தோன்
மண்தரையில் அமர்ந்தபடி பேசி வந்தான்.
நின்றுபயன் தருகின்ற நீதி கூறி,
நெருக்கிவந்த ஆசைகளை நொறுக்கி வந்தான்.
தென்றலில்லா வடநாட்டில், அசோகன் மட்டும்
தென்பொதிகைத் தென்றலைப்போல் இருந்துவந்தான்.
ஓடத்தை விட்டிறங்கி ஒருநாள் மாலை
உபகுப்தர் அன்னவனைக் காண வந்தார்.
மாடத்தில் உலவாமல் ஏழை போன்று
மண்குடிசை தனில்வாழ்ந்து வந்த மன்னன்,
சூடத்தைப் போன்றவராம் அவரை, அந்தத்
துறவியினை வணங்கிவர வேற்க லானான்.
நாடுசுற்றும் புத்தபிட்சும் அவனும், கங்கை
நதிக்கரையில் அமர்ந்தபடி பேசலானார்.