பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

'நல்ல இடத்தில் இப்படியும் அன்பற்றவர்கள் இருப்பது உலக இயல்புதான்' என்று ஒருவாறு சமாதானம் செய்துகொண்டார். அருகில் நின்றிருந்த வேறு ஒருவரிடம், "இப்போது அந்தப் பெருமானைக் காணலாமோ?: என்று கேட்டார்.

அவர் அயலூரிலிருந்து வந்திருந்தவர்; நோய்வாய்ப் பட்டிருந்தவருக்கு உறவினர். அவரது நோய்நிலை அறிந்து பார்க்க வந்தவர். அவர் புலவரை, "நீர் யார்? அவரை என்ன வேலையாகப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார்.

"நான் ஒரு புலவன்; வள்ளல் அவர்களைக் கண்டு பேசிப்போகலாம் என்று வந்தேன்" என்றார் புலவர்.

அங்கே நின்றிருந்தவர் புலவர்களின் பெருமையை உணராதவர்; இரவலர் வரிசையில் அவர்களைச் சேர்த்து எண்ணுபவர். அவர் உடனே, "ஒகோ! புலவரா? அவரிடம் பணம் வாங்க இது நேரம் அன்று. அவருடைய சொந்தக்காரர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அவரைப் பார்ப்பாரா? உம்மிடம் வந்து பேசுவாரா?" என்று கூறினார். அவர் பேச்சில் நயம் இல்லை; கடுமை இருந்தது. புலவர் தம் தலையெழுத்தை எண்ணி வருந்தி வந்த வழியே திரும்பிவிட்டார்.

நோயாளி சில நாட்களில் குணம் பெற்றார். அவரிடம் அன்பு வைத்து உடனிருந்து ஆவனவற்றைக் கவனித்த வாணராயர் ஆறுதல் பெற்றார். புலவரைக் கடுஞ்சொல் கூறி அனுப்பியவர் வாணராயருடைய இயல்பைப் பாராட்டினார்.

"மாமனுக்கு வைத்தியர் கொடுத்த மருந்தில் பாதிக் குணம் உண்டாயிற்று. நீங்கள் அருகில் இருந்து கவனித்ததனால் பாதிக் குணம் ஏற்பட்டது" என்றார். நோய்வாய்ப்பட்டிருந்தவரையே அவர் மாமன் என்று. குறிப்பிட்டார்.