90
அம்புலிப் பயணம்
ஆகஸ்டு இறுதியில் நடைபெற்ற முதல் நாள் வெளியீட்டு விழாவில் பத்து சென்டு பெரிய விமான அஞ்சல் தலைமீது குத்தப் பெற்றது.
வரலாறு காணாச் சிறப்புமிக்க நாளாகிய சூலை - 21ஆம் நாள் (1969) திங்கட்கிழமையை நாடு முழுதும் விடுமுறை நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அதிபர் நிக்ஸன் அறிவித்தார், அவர் விடுத்த அறிக்கையில்,
"மனிதன் ஒருபோதும் போய் அறியாத இடத்திற்கு: விண்வெளி வீரர்கள் செல்லுகையில், மனிதன் ஒருபோதும் செய்ய முயலாததை அவர்கள் செய்ய முற்படுகையில், நிலவுலகில் வாழும் நாம் ஒரே மக்களாக அவர்களோடு உள்ளத்தால் ஒன்றுபட்டிருக்க விழைவோம் ; புகழிலும் வியப்பிலும் அவர்களுடன் பங்கு கொள்ள விழைவோம் ; - எல்லாம் இனிது நிறைவேறும் என்று வழிபடுவதன் மூலம் அவர்கட்குத் துணை நிற்க விழைவோம். இந்த அரும் பெருந் துணிவுமிக்க முயற்சி அவர்களுடையது மட்டுமன்று, எல்லோருடையதுமாகும். அவர்கள் ஆக்கும் வரலாறு அறிவியல் வரலாறு மட்டுமன்று, மனித வரலாறும் ஆகும்“
என்று கூறப் பெற்றிருந்தது. இந்தப் பயணம் வெற்றியுடன் நிறைவேறவும், விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகத் திரும்பிவந்து சேரவும் அனைவரும் ஒன்றுபட்டு இறைவனை வழுத்தி வேண்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இனி, எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திற்குப் பலர் போகலாம்; வரலாம். ஏன்? அம்புலிக்கும் அப்பாலும் எதிர் காலப் பயணங்கள் நடைபெறலாம். என்றாலும், இந்தப் பூவுலகை விட்டு மற்றோர் உலகில் முதன் முதலாக மனிதன் அடியெடுத்து வைப்பது ஒரு தடவை தானே நிகழமுடியும்?