பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ-13

107

இந்த ஒலி 11 டன் எடையுள்ள வெடிபொருள் (Dynamite) வெடித்தலால் ஏற்படும் ஒலிக்குச் சமமானது என்று கணக்கிடப்பெற்றுள்ளது. இதன் விளைவினை அப்போலோ -12 விண் வெளி வீரர்கள் அம்புலியில் நிறுவி வந்த அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி அளந்து காட்டும். அப்போலோ-12 விண் வெளி வீரர்கள் தாம் அம்புலியினின்று திரும்பிய பொழுது தமக்கு இனி வேண்டாத ஆம்புலி ஊர்தியைக் கழற்றி விட்டதும், அது சந்திரனில் விழுந்து நொறுங்கிய பொழுது ஏற்பட்ட ஒலியும் அதிர்ச்சியும் ஈண்டு நினைவுகூரத்தக்கன. இவற்றால் அம்புலியில் ஏற்பட்ட அதிர்ச்சி அங்குள்ள மணி யொன்றினை. ஒரு மணி நேரம் தொடர்ந்து அடிக்கச் செய்ததாம்.

இந்த அம்புலிப் பயணத்திற்குத் தொடக்கத்திலிருந்தே பல தடங்கல்கள் நேரிட்டன. முதன் முதலாக ஹீலியம் வாயுத் தொட்டியில் கெடுதல் ஏற்பட்டு அது சரிசெய்யப் பெற்றது. அடுத்து, விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக இருந்த மாட்டிங்கிலி என்ற விண்வெளி வீரர் ஜெர்மன் தட்டம்மைத் தாக்குதலால் உடல் நலக் குறைவுற்றார்; அதனால் அவருக்குப் பதிலாக சுவிகார்ட் அனுப்பப்பெற்றார். மூன்றாவதாக மின்சாரக் கெடுதல் ஏற்பட்டதன் காரணமாக அம்புலியில் இறங்கும் திட்டமே கைவிடப்பெற்றது.

மூடப்பழக்கமுள்ள சில அமெரிக்கப் பார்வையாளர்கள் தீயபலனை விளைவிக்கக்கூடிய 13 என்ற எண்ணே இத்தனைக்கும் காரணம் என்று கருதுகின்றனர். விண்வெளிக் கலத்தின் எண், 13 மின்சாரச் சீர்குலைவு ஏப்ரல் 13 அன்று ஏற்பட்டது. விண்கலம் ஏவப் பெற்றது அமெரிக்க நேரப்படி 13-13 மணி. . விண்வெளிக்கலம் இறங்கும் நேரத்தை 17-13 மணிக்குப் பதிலாக 17-18 மணி என்று அமெரிக்கப் பொறி. நுட்ப வல்லுநர்கள் அறிவித்ததற்குக் காரணம் அவர்களும் எண் 13 பயக்கும் தீங்கினைக் கருதியதேயாகும் என்று கூறுகின்றனர்.