பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாம் வாழும் பூமி

9

23 மணி 56 நிமிடம் 4.1 விநாடிக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுகின்றது. இதனையே நாம் நாள் என்று வழங்குகின்றோம். இவ்வாறு அது தன் அச்சில் சுழல்வதால்தான் பகலும் இரவும் உண்டாகின்றன. இந்தப் பூமியை விட்டு விண்வெளியில் பயணம் செய்யும் இராக்கெட்டுப் பயணிக்கு இரவு பகல் என்ற வேற்றுமையே இராது. பூமி சூரியனைச் சுற்றிவரும் வழி ஒரே தளத்தில் உள்ளது. பூமியின். அச்சு அத்தளத்திற்குக் கிட்டத்தட்ட 670 அளவுள்ள கோணத்தில் சாய்ந்துள்ளது. பூமி சூரியனை வலம் வருங்கால் எப்பொழுதும் அதன் அச்சு ஒரே திசையில் சாய்ந்திருப்பதைப் படத்தில் கண்டு தெளிக.

செப்டம்பர் மாதத்தில் சில மாதங்களில் சூரியனின். தோற்றம் முதல் அதன் மறைவுவரையில் உள்ள நேரம் சற்றுக் குறைவாக உள்ளது. அங்ஙனமே, மார்ச்சு மாதத்திற்குமேல் சில மாதங்களில் அந்நேரம் அதிகமாக இருக்கின்றது. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்ன ? பூமியின் அச்சு அது செல்லும் தளத்திற்குச் சாய்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். அங்ஙனமே,, ஓர் ஆண்டில் கார் காலம், கூதிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் என்ற பருவங்கள் நேரிடுவதற்கும் இந்தச் சாய்வே காரணமாகும்.

பூமியைச் சுற்றிலும் காற்றினாலாகிய உறை ஒன்று சூழ்ந்துள்ளது. அறிவியலார் அதனை வளி மண்டலம் அல்லது காற்று மண்டலம் (Atmosphere) என்று வழங்குவர். அதில் உயிரியம் (oxygen), நைட்டிரஜன் (Nitrogen) என்ற மந்த வாயு, கரியமில வாயு, நீராவி முதலிய பல வாயுக்கள் கலந்துள்ளன. இந்தக் காற்று மண்டலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 320 கி.மீ.வரை பரவியுள்ளது. இது தரை மட்டத்தில் அடர்த்தியாகவும், மேலே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்தும் உள்ளது, காற்று மண்டலத்தின் பெரும் பகுதி (99 விழுக்காடு) 32 கி.மீ. உயரத்திற்குள்ளாகவே அமைந்து கிடக்கின்றது.