நாம் வாழும் பூமி
11
வானத்தில் காணப்பெறும் விண்மீன்கள் (Stars) 'மினுக் மினுக்'கென்று மின்னுவதும் இக்காற்று மண்டலத்தின் விளைவேயாகும். விண்மீன் ஒரு புள்ளி போன்றது. அதிலிருந்து வரும் ஒளிர்க்கதிர் சதா சலனமடையும் காற்றில் அங்குமிங்கும் திருப்பப் பெறுகின்றது. இதனால் விண்மீன் சில சமயங்களில் நமக்குத் தென்படுகின்றது. சில சமயம் மறைகின்றது. இதுவே மினுக்கிடுவதுபோல் தோன்றுகின்றது. வெண்ணிறச் சூரிய ஒளியில் அடங்கியுள்ள ஏழு நிறங்களும் வெவ்வேறு அளவாக முறிக்கப் பெறுவதால், (Refracted) சில சமயங்களில் வெவ்வேறு நிறங்களும் மினுக்குவதோடு தென்படுகின்றன. விண்மீன் அடிவானத்திலிருக்கும்போது அதன் ஒளி அதிகமாகக் காற்றினூடே வரவேண்டியுள்ளது. இதனால் மினுக்கிடுவதும் அதிகமாகின்றது. பூமியிலிருந்து 320 கி.மீ. உயரத்தில் காற்று இல்லாததால் அந்த உயரத்தில் விண்மீன்கள் மினுக்கிடா. அந்த உயரத்தில் பயணம் செய்யும் விண்வெளி விமானிக்கு அவை புள்ளிகள் போலவே தோன்றும்.
சூரிய ஒளியைக் காற்றணுக்கள் சிதற, அடிக்கின்றன; இங்ஙனம் சிதற அடிக்கப்பெறும் ஒளியின் நீல நிறம் சிவப்பு நிறத்தை விட அதிகச் செறிவுள்ளது. இதனால் தான் ஆகாயம் நீல நிறமாகத் தோற்றம் அளிக்கின்றது. ஆனால், - 320 கி.மீ. உயரத்தில் காற்று இல்லையாதலின் அங்கு ஆகாயம் கறுப்பு நிறமாகத் தோன்றும். காற்றில் சிதறப் - பெறும் ஒளி விண்மீன்களின் ஒளியைவிட அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் அவை கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால், 320 கி.மீ. உயரத்தில் ஒளிச் சிதறல் இல்லை ஆகவே, அந்த உயரத்தில் சூரியன், சந்திரன், விண்மீன்கள் இவை யாவற்றையும் ஒரே சமயத்தில் காணலாம். இங்ஙனம் கண்டதாகவே இதுகாறும் விண்வெளிப் பயணத்தை மேற் கொண்ட விமானிகளும் கூறியுள்ளனர்.