பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 9

65

பாதையிலிருந்து அம்புலி ஊர்தியை மெதுவாக இறக்கித் தாய்க்கலத்தை அணுகினர் விண்வெளி வீரர்கள். கலங்கள், இரண்டும் ஒன்றையொன்று காணாத நிலையில் இருந்த பொழுது அவற்றில் இருந்த இராடார் (Radar) கருவிகளும் கணக்கிடு கருவிகளும் (Commutor) கை கொடுத்து உதவின.

இரண்டு கலங்களும் இணைவதற்காகச் சந்தித்தமை மிகவும் அழகு வாய்ந்த காட்சியாகும்; இரண்டும் இணைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் இச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்பொழுது அம்புலி ஊர்தியின் விமானி மெக்டிவிட் தாய்க்கலத்திற்கு 30 மீட்டர் தொலைவுக்குள் வரும்படி இயக்கினார். அப்பொழுதுதான் அம்புலி ஊர்தி தன்னிடமிருந்து கழற்றி எறிந்த பகுதிகள் கீழே விழுந்து கொண்டிருந்தன. இப்பகுதிகள் சந்திரனின் தரையிலிறங்கும்போது பயன்படுபவை; அங்கிருந்து திரும்பி வருங்கால் தேவை இல்லாதவை.

இரண்டு கலங்களும் இணைந்தபிறகு அம்புலி ஊர்தியின் விண்வெளி வீரர்கள் இருவரும் தாய்க்கலத்திற்கு வந்து சேர்ந்தனர். இனி, அம்புலி ஊர்திக்கு யாதொரு வேலையும் இல்லை. அந்நிலையில் பூமியிலிருந்து தரை நிலையத்தார் வானொலி அலைக்கட்டளைகள் மூலம் 5,000 கி.மீ. உயரமான பாதைக்கு அதனை அனுப்பினர். அதனால் அப்போலோ-9 செல்லும் வழியில் அது குறுக்கிட முடியாததாயிற்று. அம்புலி ஊர்தியின் அமைப்பு விண்வெளியிலும் சந்திரனின் தரையிலுந்தான் இயங்கும்படி அமைந்திருக்கும். அதில் வெப்பந் தாங்கும் கவசம் இல்லை. ஆகவே, அது பூமிக்குத் திரும்பிவர முடியாது ; அப்படி வந்தாலும் காற்று மண்டலத்தின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து போகும்.

பயணத்தின் ஆறாம் நாளிலிருந்து ஒன்பதாம் நாள் முடிய எதிர்காலத்தில் சந்திர மண்டலத்திலிருந்து திரும்புங்கால் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து பார்த்தனர். பத்தாம் நாள் தம் கலத்திலிருந்த ஒரு முக்கிய பொறியை இயக்கியவுடன் அது பூமியின் சுற்று வழியிலிருந்து விடுபட்டு

அ-5