பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூன்முகம்

7

பல்கலைக் கழகத் துணை வேந்தர் பதவியை அளித்தது. பதவி ஏற்ற நாலாண்டுக் காலத்திற்குள் இங்குப் பல புதிய துறைகளைப் பிறப்பித்தார். முதுகயுடன் கூடிய தமிழ் ஆராய்ச்சித் துறையும் அவற்றுள் ஒன்று. பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் உறங்கிக் கிடந்த திட்டங்களையெல்லாம் உயிரியம் (Oxygen} ஊட்டிச் செயற்படச் செய்து மருத்துவ நிபுணத்துவத்தை ஆட்சி முறையிலும் காட்டின பெருந்தகை இவர், முதல் துணைவேந்தர் திரு. எஸ், கோவிந்தராஜுலுவை 'விசுவகர்மா' என்றால் மூன்றாம் துணைவேந்தர் டாக்டர் ரெட்டியை 'மயன்' என்று கூறலாம்.

இவருடைய அரும் பெரும் பணிச்சிறப்புக்களைப் பல்கலைக் கழக வட்டத்தில் பல இடங்களிலும் காணலாம், பாண்டி மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் திருப்பதிப் பல்கலைக் கழகமும் இவருடைய நினைவுச் சின்னங்களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

இவருடைய 'கடைக்கண் நோக்கு தமிழ்த்துறைபாலும் உண்டு. ஆதலால், இவருடைய ஆட்சிக் காலத்தில் இங்குப் பணியாற்றும் பேறுபெற்ற நான் இவரது அரும்பெருஞ் சேவையின் நினைவாக இச்சிறு நூலை இவருக்கு மகிழ்ச்சியுடன் அன்புப் படையலாக்குகின்றேன். அமெரிக்கர்கள் அம்புலிப், பயணத் திட்டங்களை விரைவாக நிறைவேற்றினது போல் இவரும் பல்கலைக்கழக வளர்ச்சியின் பயனுள்ள திட்டங்களை மின்னல் வேகத்தில் நிறைவேற்றுவதால் இந் நூலை இவருக்குப் படைப்பது சாலப் பொருத்தமாகும் என்று கருதுகின்றேன்.

முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ப்பணி புரிந்துவரும் என்னை யும் ஒரு கருவியாகக் கொண்டு என்னுள்ளே தோன்றாத் துணையாக நின்று வருங்காலக் கால்வழியினருக்குப் பயன்படும் வண்ணம் இச் சிறு நூலை எழுதி வெளியிட என்னை இயக்கிச் செயற்படச் செய்த ஏழுமலையின் மீது திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நெடியோனை மனம் மொழி மெய்களால் நினைந்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

ந. சுப்பு ரெட்டியார்
திருப்பதி
15-11-73