அரசியல் / 63
பேரில் பொருத்தமுற்றதாதலின் அவரவர்கள் இஷ்டம் போல் ஒவ்வோர் கூட்டங்களைக் கூடிக்கொண்டு விதண்டவாதம் வளர்க்கலாகாதென்று தடுக்க வேண்டியது.
- 2:11; ஆகஸ்டு 26, 1908 -
அவ்வகைத் தடுக்கவேண்டிய காரணம் யாதென்பீரேல், நகர சுத்திகரிப்புக் கூட்டத்தோராகும் (முனிசிபாலிட்டியில்) சுதேசிகளே சேர்ந்து சுதேசிகளுக்குள் ஒருவரைப் பிரதிநிதியாகும் கமிஷனர்களென ஒவ்வொரு பிரிவுகளாகும் டிவிஷன்களுக்கு ஒவ்வொருவரை நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் யாவரும் சுதேசிகளே யாவர்.
இத்தகையக் கமிஷனர்களால் தெரிந்தெடுக்கப்பட்டு தேசசீர்திருத்த இராஜாங்க ஆலோசனை சங்கத்தோராய் சிலர் வீற்றிருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.
ஈதன்றி குடிகளுக்குள்ள கஷ்ட நிஷ்டூரங்களை இராஜாங்கத்தோருக்கு விளக்கி வேண உதவி புரிய வேண்டும் என்னும் நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரும் வேறிருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.
அதுவும் போதாது இன்னும் குடிகளுக்குள்ள உள் சீர்கேடுகளை செவ்வை செய்ய வேண்டும் என்னும் சென்னை மஹாஜன சபைக் கூட்டத்தாரும் இருக்கின்றார்கள். அவர்களும் சுதேசிகளேயாம்.
இத்தியாதி சுதேசக் கூட்டத்தோரின் ஆலோசனையில் கலவாது கண்டவர்கள் எல்லாம் ஓர் கூட்டம் கூடிக்கொண்டு சுதேசிகள் என்பதும், நின்றவர்கள் எல்லாம் ஓர் கூட்டம் கூடிக்கொண்டு சுதேசப் பிரசங்கங்கள் செய்து தாங்கள் செய்துக் கொள்ள வேண்டிய உட்சீர்திருத்தங்களை விடுத்து இராஜாங்கத்தோரை தூஷிக்க ஏற்படுகின்றார்கள்.
அத்தகைய தூஷணாச்செயலால் தாங்கள் கெடுவதுமன்றி தங்களை அடுத்த அறியாக் குடிகளையும் அவதிக்குள்ளாக்கிவிடுகின்றார்கள்.
ஆதலின் கனவான்கள் ஒவ்வொருவரும் இதனை தேற ஆலோசித்து வீண் கூட்டத்தோரைத் தடுத்து இராஜவிசுவாசத்தைக் கொடுத்துக் குடிகளை ஆதரித்தல் வேண்டும்.
இவற்றிற்கு மாறாக சிலர் கூறுவாரும் உண்டு. அதாவது காங்கிரஸ் கூட்டத்தார் நமது இராஜாங்கத்தோருக்கு எவ்வளவோ தெரிவித்தும் அவர்கள் கவனிப்பதில்லையே என்கின்றார்கள். அஃது விசாரிணைக் குறைவேயாம்.
காங்கிரஸ் கமிட்டியார்க் கூறுவதில் இராஜங்கத்தோருக்கு ஏதேனும் தோற்றுமாயின் அக்குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தும் இருக்கின்றார்கள். நிவர்த்தி செய்துக் கொண்டும் வருகின்றார்கள்.
இராஜாங்கத்தோர் குடிகள் மீது அதிக வரிகளை ஏற்படுத்துகிறார்கள் என்று கூச்சலிடுகின்றார்கள். அவைகளும் வீண்கூச்சலேயாம்.
அதாவது (ரெவினியுவை) ச்சார்ந்த வரி வசூல்களை சுதேச கவுன்சல் மெம்பர்கள் காணாததல்ல. முநிசபில் வரி வசூல்களை சுதேச கமிஷனர்கள் காணாததல்ல. சுதேசிகளைக் கொண்டே வரிகளைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் அநுபவத்தில் இருக்க இராஜாங்கத்தோரை குறைகூறுவது பிசகேயாம்.
வரிகளை அதிகப்படுத்துவோரும் அவற்றை வசூல் செய்கிறவர்களும் வாதைப்படுகிறவர்களும் யாவரென்று நாட்டுப் புறத்தோரை விசாரித்தால் நன்கு விளங்குமே.
இன்னும் நாளதுவரையில் நாட்டுப் புறங்களிலுள்ளக் குடிகள் சாவியடைந்த பூமிகளையும் விளைந்த பூமிகளையும் ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களே நேரில் வந்து பார்வையிட்டு வரியிறை ஏற்படுத்துவார்களாயின் சுகமடைவோம். அங்ஙனமின்றி சுதேச உத்தியோகஸ்தர்கள் வரலாகாதென்று அவரவர்கள் தேவதைகளுக்குத் தேங்காய் உடைக்கின்றார்களே இஃது யாவரும் அறியா விஷயமோ.