உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கெடுத்து பாழாக்கிவிடுகின்றார்கள். சில கிராமங்கள் விளைவுகுன்றி பாழடைவதற்கும் இதுவே காரணமாகும்.

இவ்வகையாகத் தங்கள் சுதேசிகளின் இடுக்கத்தால் பாழடையும் குடிகள் நமது சுதேசிகளால் கஷ்டமடைகின்றோமென்று உணராமல் இராஜாங்கத்தோரை நோக்கி துக்கிக்கின்றார்கள்.

இவற்றுள் பெரும்பாலும் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோர் ஏழைக்குடிகளின் குறைகளை நேரில் விசாரித்து செய்யவேண்டிய காரியங்களும் சிலதுண்டு.

அதாவது - இத்தேசத்தில் வாசஞ்செய்யும் சில சாதியோர் தங்களிடம் 10,000 ரூபாய் கையிருப்பிருப்பினும் பத்துகாத தூரத்தில் ஓர் பிரபு ஆளொன்றுக்கு ஓரணா தானங்கொடுக்கின்றாரென்று கேழ்விப்பட்டவுடன் பணத்தின் பேரிலுள்ளப் பேராசையால் தூரத்தைக் கவனிக்காமல் ஓடி யாசகம்பெறுவது வழக்கம்.

இத்தகையப் பேராசை கொண்ட சாதியோருக்கு இராஜாங்க உத்தியோகங்களைக் கொடுத்து விடுவதினால் ஆயிரங்குடிகள் அர்த்தநாசமானாலும் ஆகட்டும் ஆனவரையில் பணத்தை சம்பாதிக்கும் சமயம் இதுதான் என்று எண்ணி தங்கள் வரவைப் பார்த்துக் கொண்டு இராஜாங்கத்தோரை நிந்தனைக்கு ஆளாக்கிவிடுகின்றார்கள்.

இதுபோன்ற விஷயங்கள் யாவற்றின்மீதும் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்துக் கார்ப்பதே ஏழைக்குடிகளுக்கு ஈடேற்றமாகும்.

அந்தந்த கிராமங்களிலுள்ள தாசில்தாரர்களுக்கும், முனிஷிப்புகளுக்கும், கணக்கர்களுக்கும் அங்கு சொந்தபூமிகள் இருக்கப்படாது.

அவ்வகைச் சொந்தபூமிகள் உத்தியோகஸ்தர்களுக்கு இருப்பதினால்தான் ஏழைக்குடிகளை இலவசமாக வேலைவாங்குதலும், அவ்வேலைச் செய்யாதவர்களின் பூமிகளையும், ஆடுமாடுகளையும் அலக்கழிக்கச் செய்து அடியோடும் பாழாக்கி விடுகின்றார்கள்.

போலீசு உத்தியோகஸ்தர்களின் மேல்பார்வைக்கென்று ஒவ்வோர் ஐரோப்பியர்களை சூப்பிரின்டென்டாக நியமித்திருப்பதுபோல் இரெவின்யூ இலாக்காவில் குடிகளுக்கு நேரிட்டுவருங் கஷ்டநஷ்டங்களை நேரிலறிந்து கலைக்ட்டரவர்களுக்குத் தெரிவிக்கும்படியான யூரோப்பிய ரெவின்யூ சூப்பிரின்டென்டென்ட் ஒருவரை நியமிப்பதானால் ஏழைக்குடிகளும் ஆனந்தமாகத் தங்கட் குறைகளை முறையிட்டு சீர்பெறுவதுடன் கிராம உத்தியோகஸ்தர்களும் நீதியில் நடப்பார்கள். பிரிட்டிஷ் இராஜரீக செங்கோலும் பிரகாசிக்கும்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -


45. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் திருத்தம்

கனந்தங்கிய மந்திரி லார்ட் மார்லியவர்களின் சீர்திருத்தத்தின்பேரில் நமது பத்திரிகையில் சென்றவாரம் எழுதியுள்ள ஆலோசனை சங்கத்தோர் தொகை நியமனத்தைப்பற்றி சில இந்துக்கள் விரோதசிந்தையால் தூற்றியதாகக் கேழ்வியுற்று மிக்க விசனிக்கின்றோம்.

சாதி வித்தியாசப் பிரிவினைகளும், சமய வித்தியாசப் பிரிவினைகளும் நிறைந்த இத்தேசத்தில் எடுத்தகாரியத்தை ஒற்றுமெயில் நடத்துவது மிக்க கஷ்டமேயாகும்.

ஆதலின் மற்றோர் வகையாலும் இவற்றை நிலை நிறுத்தற்கூடும், அதாவது ஆலோசினை சங்கத்திற்கு நூறுபெயரை நியமிக்க வேண்டுமானால் சாதிபேதமுள்ள இந்தியருள் 20-பெயரையும், சாதிபேதமில்லாத பூர்வ பெளத்தருள் 20-பெயரையும், மகமதியருள் 20-பெயரையும், யூரேஷியருள் 20-பெயரையும், நேட்டிவ் கிறிஸ்தவருள் 20-பெயரையும் நியமித்து ஆலோசினைகளை முடிப்பதானால் சகல குடிகளுஞ் சுகம்பெறுவார்கள்.