உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 229

மதக்கடைகளை போக்கினார்களா? பெயரால் இழிவுபடுத்திவரும் பொய்ப்பாடல்களை நெருப்பிலிட்டுக் கொளுத்தினார்களா? இல்லையே. தாழ்வுபடுத்தக்கூடிய சாதிகளுமிருத்தல் வேண்டும். மதக்கடை பரப்பி வயிறுபிழைக்கக்கூடிய சமயங்களுமிருத்தல் வேண்டும். எக்காலும் இழிவுபடுத்திவரவேண்டிய பெயர்களும் இருத்தல் வேண்டுமென்னும் அஸ்திபாரமிட்டுக்கொண்டு தாழ்ந்த வகுப்போரை முன்னேறச் செய்வோமென்பது முற்றும் பிசகேயாம். அவர்கள் தங்களை முன்னேறச் செய்து விடுவார்களென்று நம்பி அவர்களது செயலை பின்பற்றுவது ஆடு கசாயிக்காரனை நம்புவதற்கொக்கும். இனி எவ்வாற்றால் முன்னேறி சீர்பெறலாமென்பீராயின், மதப்பற்றுக்கள் யாவையும் அவரவர்கள் மனதிலும், வீட்டிலும் வைத்துவிட்டு சாதிபேதமற்றத் தமிழ்க்கூட்டாபிமானம் வைத்து திராவிடஜன மகாசங்கத்தைச் சார்ந்து பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்தில் அமர்ந்து திராவிட கலாசாலைகளும், கைத்தொழிற்சாலைகளும், வியாபாரசாலைகளும் அமைத்து சிறுவர்களைக் கற்றுத்தேறச் செய்வதுடன் பெரியோர்களும் வியாபார முயற்சியிலிருப்பார்களாயின் சாதிபேதமற்ற திராவிடர்கள் யாவரும் சீர்பெறுவார்களென்பது சத்தியம். ஆதலின் நமதரிய திராவிட சோதிரர்கள் யாவரும் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்தை நாடுங்கள். சாதிபேதமற்ற திராவிட மகாஜன சங்கக்கூட்டத்திற் கூடுங்கள். நீதிமார்க்கத்தையே என்றும் நாடுங்கள். ஆதிபரனையே என்றும் பாடுங்கள், பாடுங்கள் என்று வேண்டுகிறோம்.

உள்ளங்கையில் லக்கிரி இட்டவர்களை உள்ளகாலவரை நினையுங்கோள் என்னும் பழமொழியை மறவாது பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்தில் நிலைத்திருங்கள்.

- 3:33: சனவரி 26, 1910 -


110. நாளுக்குநாள் ராஜதுரோகிகள் தோன்றுவதென்னோ

கொடுங்கோல் ஆடாக்குறையேயாகும் சிலகாலங்களுக்கு முந்தி வெடிகுண்டைக் கையாடிவந்த வீணர்கள் நீங்கி தற்காலம் கைத்துப்பாக்கிகளைக் கரத்தில் ஒளித்து வைத்திருந்து இராஜாங்க உத்தியோகஸ்தர்களை சுட்டுக் கொலைபுரிந்துவருகின்றார்கள்.

நாஸிக் கலெக்ட்டரை சுட்டுக் கொன்ற கொலைபாதகனை பிடித்தவுடன் காணும் மநுக்கள் யாவரும் கண்டு பயப்படத்தக்க கொடுங்கோல் தண்டனை செய்திருப்பார்களாயின் இப்போது கல்கத்தாவில் இன்ஸ்பெக்ட்டரை சுட்டுக்கொன்ற கொலைபாதகன் தோன்றியிருக்கமாட்டான்.

கொலைப்பாதகனைக் கையோடு பிடித்தவுடன் சகல குடிகளும் நடுங்கத்தக்க தெண்டனையை விதிக்காது அவனுக்கு உதவியார், இவனுக்கு உதவியார், அவன் எங்கிருந்தான், இவன் எங்கிருந்தான் அவன் லாயர் என்ன பேசினான் இவன் லாயர் என்ன பேசினானென்னும் வீண் விசாரிணையில் அனந்தங் கொலைஞர்கள் தப்பித்துக்கொண்டிருக்கின்றபடியால் மற்றைய கொலை பாதகர்களுக்குக் கொலைத் தொழில் எளிதாகக் காணப்படுகின்றது.

இராஜாங்கத்தோர் கொலைப் பாதகரை மீட்பின்றி தண்டிப்பதும் இன்றி அத்தண்டனையானது சகலமக்கள் இதயங்களும் நடுங்கத்தக்க கொடுந் தண்டனையாகக் காணப்படுமாயின் கொலைஞர்களும் நடுக்குற்று தங்கள் கொடிய செயலை அகற்றுவார்கள் மற்றுமுள்ள சாந்தக் குடிகளும் சுகம் பெற்று வாழ்வார்கள்.

நாளுக்குநாள் தோன்றிவரும் ஒவ்வோர் கொலைப்பாதக மிலேச்சர்களால் அனந்தங் குடிகள் சுகக்கேட்டை அநுபவிக்கின்றார்கள். இராஜாங்கத்தோர் இலட்சங் குடிகள் சுகம்பெறுவதற்கு ஒரு கொலைப்பாதக மிலேச்சனை சகலருமறியக் கொடுந் தண்டனைப்புரிவதால் யாதொரு கெடுதியும் வாராது.