உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 379

மெலிவினாலும் வேலைக்குப் போகாமல் நின்றுவிட்டாலோ மணியத்தைக் கூப்பிடும், முநிஷிப்பைக் கூப்பிடும் என்று பயமுறுத்தி ஏவல் வாங்கி எலும்புத் தோலுமாக வதைத்துக் கொன்றுவருகின்றார்களாம். இத்தியாதி கொடூரங்களும் பெரிய பெரிய ஜமீன்களிடம் நடந்தேவருமாயின் மற்றுமுள்ள சிறிய ஜமீன்கள், மிட்டாதார்கள், மிராசுதார்கள், சுரோத்திரதாரர்களிடமுள்ளக் கூலியாட்கள் என்ன கஷ்டத்தை அநுபவித்து வருகின்றார்கள் என்பது அவர்களுள்ள நிற்பாக்கியமே போதுஞ்சான்றாம்.

இத்தகையப் பெருங் கஷ்டங்களை அநுபவித்து வரும் சில கூலியாட்கள் நம்பால் வந்து தாங்கள் யாவரும் அநுபவித்துவருங் கஷ்டநஷ்டங்கள் யாவற்றையும் விளக்கி சீர்மையில் ஏதோ சிலக் கூட்டத்தோர் கூடியிருக்கின்றார்களாம் அவர்கள் இந்தக் கூலியாட்களின் விஷயங்களையே நன்கு விசாரித்து இராஜாங்கத்தோருக்கு விளக்கி ஏழைகளுக்குக் கூலிகளை உயர்த்திக் காப்பாற்றிவருவதாகக் கேழ்விப்படுகிறோம். அக்கூட்டத்தோருட் சிலரை தென்னிந்தியாவுக்கு வரவழைத்து இந்த ஏழைப்பண்ணையாட்களின் கூலிகளை உயர்த்தி உயிர்பிச்சை அளிக்கும்படி செய்யவேண்டுமெனக் கேட்டார்கள்.

அத்தகையக் கடிதம் யாமெழுதி அக்கூட்டத்தோரை தருவிக்க வேண்டுமானால் நாலைந்து ஜமீன்தாரர்கள் கூலியாட்களும், நாலைந்து மிட்டாதார்கள் கூலியாட்களும், நாலைந்து மிராசுதார்கள் கூலியாட்களும் தனித்தனியாகக் கூடி தங்கள் கூலியின் விவரங்களை சரிவரக் கண்டெழுதி எல்லோர் கையெழுத்துமிட்டு அநுப்புவீர்களானால் அதை சீர்மையிலுள்ள சங்கத்திற்கெழுதி வரவழைக்கின்றோமென வாக்களித்து விட்டோம், அவர்களும் போயிருக்கின்றார்கள் மற்றும் ஏழைகளுக்கு உபகாரிகளாயுள்ள கனவான்கள் தாங்கள் வாசிக்குமிடங்களிலுள்ள ஏழைகளிடமுங் கையெழுத்துக்கள் வாங்கி அனுப்புவதுடன் அவரவர்கள் கூலிகளையுங் தெரிவிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:17; அக்டோபர் 4, 1911 -


232. இந்து ! இந்து !! இந்து !!!

என்போர் யார் என்னும் வினாவிற்கு ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப்பார்ப்பதே அதற்கு விடையன்றி வேறு மறுமொழி ஒன்றும் கிடையாவாம். இவற்றை நெடுநாள் அநுபவத்திற் கண்டுவந்த ஆனரேபில் கிருஷ்ணசாமி ஐயரவர்களும் இந்து என்னும் மொழிக்குத் தக்க பொருளும் கிடையாதென்று உள்ளதைத் தெள்ளறக் கூறிவிட்டார்.

அவரது யதார்த்தமொழி அறியா சிலர் (Hindu) என்னும் ஆங்கில மொழியிலுள்ள எச் என்னும் அட்சரம், சூரியனைக் குறிப்பிப்பதென்றும், (indu) என்பது சந்திரனையும் நட்சத்திரங்களையும் குறிப்பிப்பதென்றும் பொருள் கூறியுள்ளது விந்தையிலும் மிக்க விந்தையாகவே விளங்குகின்றது. எவ்வகையிலென்பரேல், (Hindu) என்னும் ஆங்கில மொழியும், H என்னும் ஆங்கில அட்சரமும் பிரிட்டீஷ் ஆட்சியார் வந்து தோன்றிய பின்னரே தோன்றிய மொழியே அன்றி முன்னர் அன்றாம். அவ்வகை H என்னும் ஆங்கில அட்சரத்தை சூரியனெனப் பொருட்கூறுவதாயின், மகமதியர் துரைத்தன காலத்தில் இந்து லோகா இந்து லோகாவெனக் கூறிவந்த மொழிக்கு எப்பொருட் கூறுவரோ அறியேம்! புத்தரென்னும் ஓர் மநுபுத்திரன் தோன்றியிருந்தார். அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் பெளத்தர்களென்றும், கிறிஸ்து என்னும் ஓர் மனுபுத்திரன் தோன்றியிருந்தார் அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்த்தவர்களென்றும், மகமதென்னும் ஓர் மனுபுத்திரன் தோன்றியிருந்தார், அவரது போதனையைப் பின்பற்றியவர்கள் முகமதியர்களென்றும் பூர்வந்தொட்டு நாளது வரையில் வழங்கி வருகின்றார்கள். அதுபோல் இவ்விந்து என்னும் மநுபுத்திரன் எவனேனும் இருந்ததுண்டா அவனால் போதிக்கப்பட்ட போதகங்களேனு முண்டா, யாதொன்றுங் கிடையாது. இந்து மதமென்றால் என்னை எனத்தட்டிக் கேட்போர்களுக்கு