பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424/ அயோத்திதாசர் சிந்தனைகள்

அரசாங்கத்தோரே முந்த செய்யவேண்டுமென்பது நியாயவிரோதமேயாம். ஏதோ இத்தேசத்தோர் பூர்வபுண்ணியத்தால் சாதிபேதமற்றதும், மதபேதமற்றதும், அன்பு மிகுத்ததும், சீவகாருண்யமுற்றதுமாகிய பிரிட்டிஷ் ராஜாங்கம் தோன்றியிருக்கின்றது. இத்தகையத் தன்னவர் அன்னியரென்னும் பேதமற்றதும், வித்தைமிகுத்ததும், கருணை நிறைந்ததுமாகிய இராஜாங்கத்தைக் கண்டேனுந் தங்களுள் சீர்திருத்தங்களை செவ்வை செய்துக் கொள்ளாது சகல சீர்திருத்தங்களையம் இராஜாங்கத்தோரே முந்த செய்ய வேண்டும் என்பது இழுக்கேயாம். குடிகள் சீர்திருத்தம் முந்துமாயின் இராஜாங்கம் அவற்றை அநுசரித்தே தட்டி சீர்திருத்திவிடும். ஆதலின் குடிகளால் சீர்கெட்டுள்ளதை குடிகளே சீர்திருத்த முந்தவேண்டுமென்பது துணிபு.

- 6:12; ஆகஸ்டு , 28, 1912 -


269. தேசத்தில் சீவகாருண்யம் உள்ளோருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா சீவகாருண்யமில்லாருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா

சீவகாருண்யம் இல்லாருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகவே தகாவாம். அதாவது பேதைமக்கள் வாழுந்தேசத்தைக் கொடுங்கோல் மன்னன் ஆளுவதற்கு ஒக்கும்.

சீவகாருண்யம் இல்லாதோர் யாவரெனில் தம்மெய்ப்போல் ஒத்த மக்களை மக்களாக பாவிக்காதவர்களும், நூறுகுடி கெட்டாலுங் கெடட்டும் தன்குடி ஒன்று பிழைத்தால் போதுமென்போர்களும், மனதாறாது வஞ்சித்தும், பொய் சொல்லியும் பொருள் பறிப்போர்களும், பசியோடுவாதைப் படுவோரைக் கண்டும் இதங்காது தாங்கள் மட்டிலும் பசிதீர உண்டு களிப்போர்களும், வீதியிலோர் மனிதன் தள்ளாடி விழுந்து விடுவானாயின் அவனைக் கண்டும் காணாதது போல் ஒதிங்கிவிடுவோர்களும், கிராமத்தில் ஏதோ ஓர்க் குடியானவன் அறியாது தீங்கு செய்யின் அக்கிராமத்தையே கெடுக்க முயல்வோர்களும், தம்மெயொத்த மக்கள் அசுத்த நீர்களை மொண்டு குடித்துப் பலவகை வியாதிகளால் மடியவேண்டும். தாங்கள் மட்டிலும் சுத்தநீரை மொண்டு குடித்து சுகம் பெறவாழ வேண்டும் என்போர்களும், பலபேர் பேரிலுங் கோட் சொல்லி அவரவர்கள் குடிகளைக் கெடுத்து தங்கள் மட்டிலுங் கெட்டிக்காரர்களென காலம் பார்த்து அபிநயிப்பவர்களும், எத்தொழிலும் செய்தறியா சோம்பேறிகளாயிருப்பினும் எல்லாம் அறிந்தவர்கள் போற் பொய்ச்சொல்லி ஏமாற்றுகிறவர்களும், எல்லா மக்களும் உழைத்து சீவிக்க வேண்டும். தாங்கள் மட்டிலும் உழைப்பின்றி சீவிக்க வேண்டும் என்று எண்ணுவோர்களும், தங்கள் புசிப்பிற்காக மனிதர்களையும், மாடுகளையும், குதிரைகளையும் உயிருடன் நெருப்பிலிட்டு வதைத்து சுட்டுத்தின்றுள்ளவர்களையும், தின்போர்களையும், தம்மெயொத்த ஏழைகள் கல்வி விருத்தியடைந்து நாகரீகம் பெற்று வாழக் கூடாதென்று எண்ணுவோர்களேயாவர். அத்தகையோர்களுக்கு அதிகாரமும் அந்தஸ்துமுள்ளப் பெரிய உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ள சீவகாருண்யமற்ற சிறியச்சிந்தையால் பெரிய உத்தியோகத்தைப் பெயரினும் அக்குணம் மாறாது. அவர்களுக்குள்ளடங்கிய உத்தியோகஸ்தர்களையுங் குடிகளையும் அலங்கோலப்படுத்திக்கொண்டே வருவார்கள். அவர்கள் செய்துவரும் சீவகாருண்யமற்றச் செயல்களால் சீவகாருண்யமுள்ள ராஜாங்கத்தின் சிறப்புங் குன்றிப்போம். ஈதன்றி சீவகாருண்யமில்லாதோர்க்கு செல்வாக்குள்ள உத்தியோகங்கள் பெருகிவிடுமாயின் சீவகாருண்யமுள்ள இராஜாங்கத்தையே கெடுக்க முயல்வதன்றி வாக்கு செல்லுகையால் அவர்களுக்குள் விரோதிகளாயக் குடிகளை அன்றே நசிக்க யெத்தனிப்பார்கள். சீவகாருண்யம் எவரிடத்து இல்லையோ அவர்களுக்கு நன்றியும் இருக்காதென்பது திண்ணம். அவர்களுக்குச் செய்யும் நலங்கள் யாவும் நெருப்பில் விழுந்த தேளை எடுத்து வெளியில் விடுவதற்கும், வலையில் அகப்பட்டுள்ள புலியை விடுவித்தலுக்கும்