அரசியல் / 431
சுதேசிகளென்று கூக்குரலிட்டு ஆர்ப்பரித்தப் பிரபுக்களும் கல்வியாளரும் எங்குபோய் மறைந்தனர்களோ விளங்கவில்லை. யதார்த்த சுதேசிகளாயின் ஏழைகளாம் சுதேசமக்களை இனிது நோக்கார்களோ, இத்தகைய பெரும் பஞ்சகாலத்தில் பெருங்கூட்டமாயுள்ள ஏழை மக்களை நோக்காமலும் அவர்களது கஷ்ட நஷ்டங்களைப் பாராமலும் ரூபாயிற்கு ஐந்துபடி விற்றபோதே பஞ்சம், பஞ்சமெனக் கூச்சலிட்டு கொள்ளையிட்டது சகலரும் அறிந்திருக்க, ரூபாயிற்கு மூணரைபடி யென வந்துள்ளபோது ஏழை மக்கள் என்ன பசிபட்டினியால் வருந்துவார்களென்றும் இதக்கமென்பதில்லா சுதேசிகள் என்போர்களுக்கு சுதேச வரசாட்சியுங் கொடுத்துவிட்டால் ஏழைக்குடிகளின் மீது என்ன நோக்கம் வைப்பார்கள். சிறுமீன்களெல்லாம் பெருமீன்களுக்கு இரையென்னும் பழமொழிபோல் கனவான்களென்னும் ஐந்துபேருக்கு ஏழைகளென்னும் நூறுபேர் இரையாகவேண்டியதேயாம்.
தேசமக்களே இதைக் கவனிக்கவேண்டியது. சுதேசிகள், சுதேசிகளெனப் பெருங்கூச்சலிட்டு பெருங்கூட்டங்களை தங்கள் வசப்படுத்திக்கொள்ளவும் அதற்கென்று பணம் வசூலிக்கவும் வீதிவீதியாய் பிரசங்கிக்கவுமாகத் திரிந்த பெரியோர்கள் ஏழைமக்களின் பரிதாபநிலைகளையும் அவர்கள் கஷ்டங்களையும் நோக்கி கனவான்களையடுத்து நமது சுதேச ஏழைக்குடிகள் பஞ்சத்தால் வருந்துகின்றார்கள். அவர்களை இக்காலத்தில் ஆதரிக்க வேண்டுமென்று முயன்று பணம் வசூல் செய்து பஞ்சத்தால் வருந்தும் ஏழைகளைப் பார்ப்பார்களாயின் இவர்களை யதார்த்த சுதேசிகளென்றும், சுதேசிகளைக் காப்பவர்களென்றும், சுயராட்சியம் இவர்களுக்கே பொருந்துமென்றும் கூறலாகும். அங்ஙனமின்றி தங்கள் தங்கள் சுயப்பிரயோசனத்தைக் கருதி சுயப்பிரயோசனத்திற்குப் பாடுபடுவோரை சுதேசப் பெரியோர்களென்றுங் கருதப்போமோ, அவர்கள் வார்த்தைகளை நம்பியொழுக மக்கள் சுகம் பெருவார்களோ, ஒருக்காலும் சுகம் பெறப்போகிறதில்லை. சேமகாலத்திலேயே ஏழைமக்களைக் கவனிக்காதவர்கள் பஞ்சகாலத்தில் ஏழைகளைக் கவனிப்பார்களோ, கனவிலுங் கவனிக்கமாட்டார்கள் என்பதை அநுபவத்திலும் காட்சியிலுமே காணலாம்.
அதாவது தற்காலம் சுதேசிகளென்றுக் கூச்சலிடுபவர்களில் ஓர் கிராமத்திற்கு அதிகார உத்தியோகஸ்தர்களாகத் தோன்றுகிறவர்கள் அக்கிராமத்துக் குடிகளை அன்புடன் ஆதரித்து சீர்திருத்துகின்றார்களா அல்லது அவர்களுக்குள்ளப் பொன்தாலியையும் உரிந்துக்கொண்டு மரத்தாலி கட்டுகின்றார்களாவென்பதும் கிராமந் தவிர நகரங்களில் பெரிய உத்தியோகங்களைப் பெற்றுள்ள சுதேசிகளென்போர் சுதேசக்குடிகளின் கஷ்டநஷ்டங்களைப் பார்க்கின்றார்களா; தங்கள் சுயப்பிரயோசனங்களைக் கருதி ஏழை மக்களை வதைக்கின்றார்களா என்பதை உய்த்துநோக்குவார்களாயின் அவர்கள் போதனைக்கும் உட்படார்கள், அவர்கள் சாவகாசத்தையும் ஏற்கார்கள், இச்தேசத்துள் எத்தனையோ கனவான்களும் எத்தனையோ கல்வியிற் தேர்ந்த உத்தியோகஸ்தர்களும் இருந்தும் ஏழைமக்கள் இப்பஞ்சகாலத்திற் படுங் கஷ்டங்களை கருதாமலும் அவ்வார்த்தைகளை எடுத்துப் பேசாமலுமே தங்கள் தங்கள் சுகங்களையே மேலாகப் பார்த்திருக்கின்றார்கள். இப்பேர்க்கொத்த பெரும் பஞ்சகாலத்தில் கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனம் மட்டிலும் இல்லாதிருப்பின் இலட்சம் லட்சமாக ஏழை மக்கள் மடிந்தேபோயிருப்பார்கள். பிரிட்டிஷ் துரைத்தனக் கருணையாலும், பிரிட்டிஷ் துரைமக்கள் கருணையாலும் ஏற்படுத்தியுள்ள ஹார்பரும், இரயில்வேக்களும், டிராம்வேக்களும், அச்சுக்கூடங்களும், ஷாப்புகளும், கம்பனிகளும், மற்றுமுள்ளப் பலத் தொழில்களும் பரவிநிற்கின்றபடியால் ஏழை மக்கள் அரைவயிற்றுக் கஞ்சேனுங் குடித்து உயிர்பிழைத்திருக்கின்றார்கள். அத்தகையக் கூலிகளுக்கும் சரிவரக் கூலிகொடாது இலஞ்சம் பெற்று முதலாளிகளாக உலாவுவோரும் ஓர் பெரியமனிதர்களென்றே நடித்து வருகின்றார்கள்.