652 / அயோத்திதாசர் சிந்தனைகள்
ஆபரணங்களாகப் பூண்டிருந்தாரென்றும், பெளத்த உபாசகர்களும், சாக்கையர்களும் சித்தார்த்தரது மாபூதியென்னும் சாம்பலை புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்று பிரிவாக நெற்றியில் பூசுவதுடன் அவரை தகனஞ்செய்த மிகுதியாய சந்தனக்கட்டைகளில் ஒவ்வொன்றைக் கொண்டுபோய் இழைத்து பொட்டிட்டு அறவாழியானை சிந்தித்துவந்த அன்பினிலையை சிவாச்சாரி யாரறியாராயினும் வெறுமனே கிடைக்கும் சாணச்சாம்பலை விபரீதப் பொருளெனப் பகட்டி தங்களை அடுத்தவர்களைப் பூசிக்கச்செய்வதுடன் அதற்கோர் தீட்சையுண்டு, அதை நீங்கள் பெற்றுக் கொண்டபோதுதான் விபூதி அணியலாகும், மற்றப்படி அணிவது பெருந்தோஷமெனக் கூறி அதற்காயப் பொருள்பறித்துக்கொண்டு நெற்றியிலிடும் சாம்பலுக்கு நேர்ந்த கதைகளெல்லாங் கற்பித்துவந்ததுடன் அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுனிவர்கள் உலக விவகாரங்களற்று தன்னை யறியுங் காலமே காலமெனக் கூறுமொழிக்கு பாலிபாஷையாம் மகடபாஷையில் சைவசமயமே சமயமென சிறப்பித்துக் கூறுமொழியின் அந்தரார்த்தத்தை சிவாச்சாரியறியாது தங்களை சிறப்பித்து சுகசீவனஞ் செய்துகொள்ளுமாறு சிவமதத்தோரென்பதுடன் தங்களை சைவசமயத்தோர் சைவசமயத்தோரென்றுங் கூறற்குத் தலைப்பட்டார்.
பௌத்தர்களுக்குள் புத்தரை என்றும் அழியா பதுமநிதியென்றும், அவரது தன்மத்தை என்றுமழியா தன்மநிதியென்றும், அவரது சங்கத்தை யென்றுமழியா சங்கநிதியென்றும் வழங்கிவந்து அவைகள் எக்காலும் தங்கள் சிந்தையில் நிலைப்பதற்காக அரசமரக் கட்டையில் சிறுமணிகள் செய்து துவாரமிட்டுக்கயிற்றில் கோர்த்து வைத்துக்கொண்டு ஒழிந்த நேரங்களில் புத்த, தன்ம, சங்கமென உருட்டிவருவது வழக்கமாகும்.
அம்மணிக்கு தன்மகாயத்தை சிந்திக்கும் மணியென்றும், உருதிரட்டு மணியென்றும் உரு திரட்டுங் கட்டையென்றும் வழங்கி வந்தார்கள். சிவாச்சாரியாரோ, அம்மணிக்கு மாறுதலாக பேரிலந்தைக் கொட்டைகளைக் கொண்டுவந்து உருதிரட்டு மணியென்னும் பெயரை மாற்றி உருதிராட்ச மணியென வழங்கும்படிச் செய்துகொண்டார்.
பௌத்தர்கள் மணியைக்கொண்டு உருபோட்டு சிந்திப்பதற்கோர் உபாயஞ்செய்துக்கொண்டிருக்க அதன் கருத்தறியா சிவாச்சாரியார் உருதிரட்டுங் கொட்டையாலேயே தங்களுக்குத் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் அனந்த சுகங்களுண்டெனக் கூறி சிலாரூபங்களாலும், கொட்டைகளாலும் சாணச்சாம்பலாலும் மக்களுக்கு சுகமுண்டென்னும் சோம்பலையும், மதி மயக்கையும் உண்டு செய்துவிட்டார்.
ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் திராவிடவேஷப்பிராமணர்கள் பௌத்தர்களால் வழங்கிவரும் தேகதத்துவப் போகங்களைக் கேட்டிருந்தவர்களாதலின் அதே பாகமாக சிலாலயங்களைக் கட்ட ஆரம்பித்துக் கொண்டார்கள்.
அதாவது ஒவ்வோர் மனுக்களின் தேகத்துள்ளும் அடிவயிற்றிற்குங்கீழும், மூலத்திற்கும் உள்ளது மண்ணினது பாகமென்றும், தொப்புலில் உள்ளது நீர்பாகமென்றும், மார்பிலுள்ளது அக்கினிபாகமென்றும், கழுத்திலுள்ளது காற்றின் பாகமென்றும், நெற்றியிலுள்ளது ஆகாயபாகமென்றும் வகுத்து தங்கடங்கள் மனதைப் புறம்பே செல்லவிடாது தேகதத்துவ ஆராய்ச்சியில் நிலைத்திருந்த சமண முநிவர்களின் கருத்தையொட்டி தங்கள் சிலாலயங் கட்டுங்கால் அதனுள் நுழையும் வாயிற்படியில் ஓர் சதுரக்கல் எழுப்பி அதன்மீது கோசமும், பீஜமும், யானையின் தலையுந் துதிக்கைபோலும் கற்களிற் செய்து இதுவே மனிதனின் மூல ஆதாரபீடமென்றும், இதுவே பிள்ளை ஈவோர் பீடமென்றும், தேகத்தைக் கெடுத்துப் பாழடையச் செய்வதற்கு இதுவே விக்கினபீடமென்றும் முதற்பீடங் கட்டிவிட்டு;
அதற்குமேல் இதுவே மண்ணினது பீடமென்றும், இதுவே உற்பத்திகளுக்கும் ஆதாரபீடமென்றும் அடிவயிற்றின் சுய அதிட்டானபீடமென்றும் சதுரமாய் இரண்டாவது பீடங் கட்டிவிட்டு;