பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 115

அஃதெவ்வகையில் என்பீரேல், சென்னையில் சாக்கைய பௌத்த சங்கத்தை நாட்டிய காலத்தில் ஓர் வித்துவான் வெளிவந்து பௌத்தரை தூஷித்து புத்தகம் எழுதியதுமன்றி பௌத்தர்கள் தெய்வதூஷணஞ் செய்கிறார்களென்று தங்கள் சமயத்தோருக்குப் பொய்யைச்சொல்லி அன்னவர்களா உள்ளவர்களை எல்லாம் வீண்விரோதத்தை உண்டுசெய்து தமிழில் மிக்க வல்லவனென்னும் படாடம்பங்காட்டி அன்னோர் சமயவாசிகள் மெச்ச நடித்தும் பொய்யைச் சொல்லி விரோதத்தை வளர்த்தும், பெரியோரை தூஷித்தும் வந்தபலனை தான் மடியுங்கால் யாரும் அற்றனுபவித்ததுன்பமே போதுஞ்சான்றாம்.

அத்தகையோர்க்கு உதவியாய் தற்காலம் மற்றொருவர்தோன்றி பௌத்தர்கள் தெய்வதூஷணஞ் செய்கின்றார்களென்று பொய்யைச்சொல்லி அன்பர்களுக்கு விரோதத்தை உண்டு செய்து வீண்கலகத்தைப்பெருக்க ஆரம்பிக்கின்றவர் எங்கள் தெய்வத்தை இன்னவிதமாக இன்னார் தூஷித்தாரென்று அதிகாரிகளிடம் ரூபிப்பாராயின் அவர்கள் தேர்ந்த விசாரிணையால் தெண்டிக்கக் கார்த்திருக்கின்றார்கள்.

அத்தகைய நியாயவழியில் செல்லாது தூஷிக்கின்றார்களென்று பொய்யைச் சொல்லி தானே தூஷித்தும், தானே அவதூறு செய்தும், சங்கத்தோரெல்லவரையும் மனத்தாங்கல் அடையச்செய்துள்ள பலனை தானே கூடிய சீக்கிறத்தில் அனுபவிப்பார். அன்னோர் தெய்வமே அதற்கு சாட்சியமாம் என்பது சத்தியம்.

- 3:26; டிசம்பர் 8, 1909 –


39. அவனன்றி ஓரணுவுமசையாது

வினா : அவனன்றி ஓரணுவுமசையாது என்பதனால், இடிவிழுந்து சாவதும், வீடுநஷ்டமாவதும், புசலடித்து கப்பல் முழுகிப்போய் அனாதரவாய் மாள்வதும், கன்மாரி பெய்து பட்சிகளும், மிருகங்களும், ஊர்வன முதலியதும் காரணமின்றி உயிர் துறப்பதும், பூகம்பமுண்டாய் ஒரு பட்டணம் அப்படியே நடுநடுங்கி ஆயிரம் ஆயிரமாய் ஜனங்கள் சாவதும், நடுநித்திரையில் வீடிடிந்து வீழ்ந்து மண்டை சிதறி விலாவெலும்புடைந்து மரிப்பதும், பாம்பு கடியுண்டு உயிரிழப்பதும், விருத்தாப்பிய தாய்தந்தையரையும், சிறு சோதரர்களையும் வேலைசெய்து காப்பாற்றிவந்த ஒருவனுக்குக் கண்தெரியாமற் போவதும். ஆனதால் மேற்சொன்னபடி அன்னையும் தந்தையும் திக்கற்று இரந்து குடிப்பதும் பாலிய ஆணுக்கும் பெண்ணுக்கும் அம்மை வார்த்து கண்தெரியாமற்றி கைப்பதும், பத்துமாதமும் பலகஷ்டங்களை அனுபவித்து பிரசவிக்கும் சமயத்தில் உயிரற்று குழந்தை பிறப்பதும், தாயே சாவதும், தாயும்பிள்ளையும் சாவதும் அவன் செயல்தானோ?

தி.சி. நாராயணசாமி பிள்ளை எச்.எப்.யு., உ.கோ .

விடை: “அவனன்றி யோரணுவு மசையா தெனும்பெரிவாப்தர் மொழியொன்று கண்டாய்” எனக் கூறியுள்ளவற்றுள் அம்மொழி அவனவனென்னும் மீமிசை பெற்று வராது அவனன்றி, யெனவெழுந்த முன்னிலைச் சுட்டுமொழியை காணா வஸ்துவின் கருத்துரை யேற்றல் கனக்குறைவேயாகும். அவனவன் செய்யுங் கன்ம பலனை அவனவனே அநுபவித்துத் தீரல்வேண்டுமேயன்றி ஓரணுவேனு மற்றவர்களால் அகற்றலாகாது என்பது கருத்து. அவன் செய்த கன்மத்தை அவனே அனுபவித்துத் தீரல் வேண்டும் பல சீவர்கள் செய்யுங் குற்றங்கள் யாவற்றிற்கும் ஒருவன் காரணனென்று கூறுவது ஒவ்வாமொழியேயாகும். அவன்செயல் நற்செயலாயின் நற்பலனடைவான். துற்செயலாயின் துற்பலனடைவான். அவ்விரு வினைப்பயனுள் ஓரணுவேனும் மற்றவர்களால் அகற்றலாகாது.

முன்மெய்ச்சுட்டு அவனென்பதும், தன்மெய்ச்சுட்டு தானென்பதும் ரூபக்குறிப்புகளன்றி அரூபக்குறிப்புகளாகாவாம்.

இத்தகையக் கருத்துகொண்டே தாயுமானவர் மற்றோரிடத்திற் கூறியுள்ள “தானானதன்மயமேயல்லால்” என்னு மொழியைக்கொண்டே தனக்கன்னிய வேறுமயமில்லை என்பது துணிபாயிற்று.