பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 503

105. வேண்டி வினைசெயேல்

வினை - குறித்த தொழிலை ஒருவன் செய்து வருகின்றானென்றறிந்தும், வேண்டி - அத்தொழிலை நீயும் விரும்பி, செயேல் - செய்யாதே யென்பதாம்.

அதாவது, ஒருவன் அத்தொழிலை நடத்தி வருகின்றானென்றறிந்திருந்தும் அதை நாடுவதாயின் எதிரியைக் கெடுப்பதற்கு ஏதுவென்று உணர்ந்த ஞானத்தாய் வேண்டி வினைசெயேலென்று கூறியுள்ளாள்.

106. வைகரைத் துயிலெழு

வைகரை - சூரியவுதயகாலத்தில், துயில் - நித்திரையைவிட்டு, யெழு - நீ யெழுந்திரு மென்பதாம்.

வைகரை விழிப்பே சூரியகலை, சந்திரகலைக்கு ஆதாரமாதலின் சூரியன் கரைகட்டுக்கு விழிக்க வேண்டுமென்று கூறியுள்ளாள்.

107. ஒன்னாரைச்சேரேல்

ஒன்னாரை - பகைவர்களாகும் சத்துருக்களை, சேரேல் - நெருங்காதே யென்பதாம்.

அடுத்து கெடுப்பது பகைவர் சுவாபமாதலின் அவர்களை நெருங் கலாகாதென்பது கருத்து.

108. ஓரஞ் சொல்லேல்

ஓரம் - ஒருவர் சார்பாய் சார்ந்துகொண்டு மற்றொருவருக்குத் தீங்குண்டாகத்தக்க வார்த்தையை, சொல்லேல் - எக்காலுஞ் சொல்லாதே யென்பதாம்.

எக்காலும் நடுநிலையினின்று சகல காரியாதிகளிலும் பேசவேண்டும் என்பது கருத்து.

ஒளவை, அம்மையென்னும் பெயர்பெற்ற ஞானத்தாய் அருளிய முதல் வாசகம் முற்றிற்று.

(இவ்வாசகம் இரண்டாமாண்டு 42ஆம் இலக்கத்தில் தொடங்கி மூன்றாமாண்டு 11ஆம் இலக்கத்தில் முற்றுப் பெறுகிறது)

ஞானத்தாய் ஓளவையார் அருளிய இரண்டாம் வாசகம்

காப்பு

குன்றை வேந்தன் செல்வனடியினை / யென்று மேற்றித் தொழுவோமியாமே.

குன்றைவேந்தன் - மலைக்குன்றில் வாழரசனென்றும், செல்வன் - அழியா சம்பத்தனென்றும் வழங்கப்பெற்ற புத்தபிரானின், அடியினை - செந்தாமரைப் பாதங்களை, என்றும் - எக்காலமும், ஏற்றி - போற்றி, தொழுவோம் - வணங்குவோம், யாம் - யாங்கள் என்றவாறு.

அரசன் மரத்தடியில் உட்கார்ந்திருந்ததுகொண்டு அரசன்மரம், அரசமரமெனக் காரணப்பெயரைப் பெற்றது போல், விம்பாசார அரசன் ஆளுகைக் குட்பட்ட ஓர் குன்றின்மீது சித்தார்த்தியாம் அரசன் வீற்றிருந்து, சத்திய தன்மமாம். தசபாரமென்னும் தசசீலங்களைப் பதிவித்து, விம்பாசாரனால் பலவகை தன்மங்களையும் செய்வித்துவந்த பீடமாகுங் குன்றையே ஆதாரமாகக்கொண்டு குன்றைவேந்தனென்றும், வரையாது கொடுக்கும் ஈகையை ஆதாரமாகக்கொண்டு செல்வனென்றும், வழங்கிவந்தப் பெயர்களையே ஞானத்தாய் தானியற்றியுள்ள இரண்டாம் வாசகக் காப்பிற் கூறியுள்ளாள்.

பின்கலைநிகண்டு

சிறந்திடுங் குன்றைவேந்தன் குணபத்திரன் சீலநூலை
யறங்செயா வாறேகற்றவதிமயக்கத்தினாலே
குறைந்திடுந் தமது மேற்கொள்கொளீயமற்றதுகரந்தே
யறிந்தது மறியாதாரைப்யேற்றலு மிழிமடந்தான்.