பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

630 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) ஒருவனை நெருப்பினாற் சுட்டப் புண்ணானது ஆறிப்போம். நாவினாற் புண்படக்கூறிய கொடுமொழியானது என்றும் ஆறாதென்பது பொழிப்பு.

(க.) நெருப்பினாற் சுடப்பட்ட வருத்தமானது தன்னில் தானே அகன்றுபோம். நாவினாற் புண்படக்கூறிய கொடுமொழியின் வருத்தமானது என்றும் அகலாதென்பது கருத்து.

(வி.) மெல்லிய தேகத்தில் நெருப்பினாற் சுடப்பட்ட நோயானது கூடிய சீக்கிரந் தன்னில் தானே அடங்கிப்போம். ஒருவன் தன் நாவினால் எதிரியின் மனம் புண்படக் கூறுமொழியின் நோயானது குணக்குன்றில் ஏறாதோரை எக்காலும் வாதிக்கும். ஆதலின் குணக்குன்று ஏறிய விவேகிகளை மற்றோர் புண்படக் கூறினும் அவற்றை அப்போதே மறந்து புண்படக் கூறலாகாதென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "தன்னையொருவ னிகழ்ந்துரைப்பிற் றானவனைப், பின்னையுரையாப் பெருமெயான் - மூன்னை, வினைப்பயனுமாயிற்றா மென்றதன் கண் மெய்ம்மெ, நினைத்தொழிய நெஞ்சினோயில்” என்னு மாதாரங்கொண்டு எவ்விதத்தேனும் ஒருவர் மனம் புண்படக் கொடுமொழிகளைக் கூறலாகாதென்பது விரிவு.

10.கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

(ப.) கதங்காத்துக் - தனது கோபாக்கினியை யடக்கி, கற்றடங்க - கற்றவழியில் நிற்போன், செவ்வி - செவ்விய, லாற்றுவான் - ஆறுதலடைவான், (அதுவே) யறம்பார்க்கு - தன்மநெறியின்கண்ணின்று, மாற்றி - ஆறுதலில், நுழைந்த - அமர்ந்தோனது நிலையை யொக்கு மென்பது பதம்.

(பொ.) கோபத்தை அடக்கிக் கற்றவழியில் நிற்போன் அறநெறியில் நின்றோன் ஆற்றலை அடைவானென்பது பொழிப்பு.

(க.) தனக்குள் எழுஉங் கோபாக்கினியை அவித்து கற்றநிலையில் அடங்குவோன் அறவாழியந்தணன் நுழைந்த ஆறுத நிலையில் அமர்வானென்பது கருத்து.

(வி.) அடக்கத்துள் தனக்குள் எழுங் கோபத்தை முதலாவது அடக்கி தான் கற்ற நீதிநெறி ஒழுக்கத்தில் நிலைப்பவன் அறக்கடவுளால் ஆதிபகவன் அமர்ந்தவிடம் புக்குவானென்பது விரிவு.


14. ஒழுக்கமுடைமெய்

அதாவது ஒழுக்கமுடைமெய் என்பது மக்களது மனோ வாக்குக் காய மென்னும் முன்றினையும் அடக்கியாளுஞ் செயலுக்குரிய பொருளேயாம். அதுகொண்டே காரிகையார் "ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாமோதலிநன்றே யொழுக்கமுடைமெ" என வற்புறுத்திக் கற்பதினும் திரிகரண ஒடுக்கமே மேலெனக் கூறியுள்ளார்.

1.ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.

(ப.) ஒழுக்கம் - ஒடுக்கச்செயலானது, விழுப்பந் - மேலாய சிறப்பை, தரலா - கொடுத்தலால், னொழுக்க - அவ்வொழுக்கம், முயிரினு - உயிருக்கு மேலாக, மோம்பப்படும் - கருதப்படுமென்பது பதம்.

(பொ.) திரிகரண ஒடுக்கச் செயலானது மேலாய சிறப்பைத் தரலால் அவற்றை உயிரினு மேலாகக் கருதி காக்கவேண்டுமென்பது பொழிப்பு.

(க.) மனோ வாக்கு காய மூன்றும் ஒடுக்கச் செய்யும் செயலே சகலவற்றினுஞ் சிறந்ததாதலின் அவற்றைத் தங்கள் உயிரினும் மேலாக ஓம்பிக் காத்தல் வேண்டுமென்பது கருத்து.

(வி.) படைக்கஞ்சி தனது உயிர் போம் என்று ஒடுங்குதலினும் வியாதியினாற்றனதுயிர் போமென்று ஒடுங்குதலினும், அக்கினியினால் தனதுயிர் போமென்று ஒடுங்குதலினும், நீரினால் தனதுயிர் போமென்று ஒடுங்குதலினும், மனத்தினால் எழுஉங் கெட்ட எண்ணங்கள் எழாமல் ஒடுங்கியும், நாவினால்