பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

736 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) அரணானது பகைவரை முனைந்துவென்றும் அவ்வீரங் குன்றாத செயலுடைத்தாகி சுத்த வீரமெழுவற்கு ஆதாரபீடமாக முகிந்திருத்தல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) அரண் காப்பாளராம் சுத்த வீரர் முனைமுகத்து நின்று வெல்லினும் அத்திடவீரங் குன்றாது மேலும் மேலும் வீரத்தை உண்டுசெய்வதற்கோர் சூத்திர பாகமாக முடிந்திருக்க வேண்டியதே அரண் என்னும் நகரமென்னப்படும் என்பது விரிவு.

10.எனைமாட்சித் தாகிய கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்.

(ப.) எனை மாட்சித் - எத்தகையவரணிலை யுற்றிருப்பினும், தாகியக் கண்ணும் - அதனை நோக்குற்றிராத பார்வையும், வினைமாட்சி - அதனை சீர்திருத்திவரும் முயற்சியினிலையும், யில்லார்க - இல்லாதவர்களிடத்து, தரண் - கொத்தளமானது, ணில்ல - நிலையாதென்பது பதம்.

(பொ.) எத்தகைய அரணிலை யுற்றிருப்பினும் அதனை நோக்குற்றிராத பார்வையும் அதனை சீர்திருத்திவரும் முயற்சியினிலையும் இல்லாதவர்களிடத்து கொத்தளமானது நிலையாது என்பது பொழிப்பு.

(க.) பலவகை யூகையாகக் கோட்டையை அமைத்திருப்பினும் அரசன் அதன் மீது கண்ணோக்கமும் எக்காலுமவற்றை சீர்திருத்திவரும் முயற்சியும் இல்லாமற் போவானாயின் அரண் அவனுக்கு நிலையாது என்பது கருத்து.

(வி.) மண்ணரண், மலையரண், காட்டரண் நாட்டரண்யாவுங் குறைவர அமைக்கப்பெற்றிருப்பினும் அரசனது பார்வையும் அதனை மேலு மேலும் சீர்திருத்து முயற்சியுமில்லாமற் போமாயின் அரண் சீரழிவதுடன் அரசனது வீரமுங் குன்றிப்போமென்பது விரிவு.

43. இறைமாட்சி

பொருளியலில் நாட்டியல் நகரவியலை விளக்கி அவைகட்காதாரபீடமாம் அரசியலின் விதிவழிகளை விளக்கலானார்.

1.படைகுடி கூழமைச்சு நட்பரணாறு
முடையா னரசரு ளேறு.

(ப.) படை - நால்வகை சேனையும், குடி - நல்வாழ்க்கையிற் கூடிவாழு மக்களும், கூழ் - தானிய நிறை பண்டிகளும், அமைச்சு - ஆலோசினை மிகுத்த மந்திரவாதிகளும், நட் - விளைநாடும், பரணாறு - நகரமோடாறும், முடையா - உடையவனே, னரசரு - அரசருக்குள், ளேறு - சிம்மத்திற்கு நிகராவானென்பது பதம்.

(பொ.) நால்வகை சேனைகளும், நல்வாழ்க்கையிற் கூடி வாழும் மக்களும் தானிய நிறை பண்டிகளும், ஆலோசினை மிகுத்த மந்திரவாதிகளும், விளைநாடும், நகர மோடாறும் உடையவனே அரசருள் சிம்மத்திற்கு நிகராவான் என்பது பொழிப்பு.

(க.) நாடும் நகரமும் நால்வகை சேனைகளும் சீரமைந்த குடிகளும் பண்டிகள் நிறம்பிய தானியங்களும் விவேகமிகுத்த அமைச்சர்களுமாய அறுவகைத்தானையுடைய அரசன் சிம்மத்திற்கு நிகராவன் என்பது கருத்து.

(வி.) வளந்தங்கிய நாடும், சிறப்புற்ற நகரமும், வீரமிகுந்த சேனைகளும், செல்காலம், நிகழ்காலம் வருங்காலம் மூன்றினையுமறிந்து சொல்லக்கூடிய மந்திரிகளும், இராஜ விசுவாசம் அமைந்த குடிகளும் குறைவற்ற தானியப் பண்டிகளுமாய அறுவகை நிறைவுகளும் அமையப்பெற்ற அரசன் சகல மிருகங்களையும் அடக்கி ஆளும் சிம்மத்திற்கு நிகராவான் என்பது விரிவு. இவற்றையே சேந்தனார் "கூட்டத்தொரு பெயருள் படையுங்குடியுங் கூழுமமைச்சு மரணு நட்பு மாசியலாறே" என்றுக்கூறியவற்றுள் உரைவாணர் நட்பை வளநாட்டமைதியென்றும், நட்டாற்றரமென்றும், நட்டுவிளை பொருளென்றும் பூமியின் நட்பே ஓங்குமாயின் உலக மக்கள் நட்பும் ஓங்குமென வரைந்துள்ளார்கள் என்பது விரிவு.