பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /17


அதுபோல் இப்பெரியசாதியென வழங்கி வரும் மநுமக்களுக்கோர் மணமுண்டா அல்லது பெரியசாதி என்போர்களால் குடிகளுக்கு ஏதேனும் சுகமுண்டா, இவ்விரண்டுங் கிடையாது. இவ்விரண்டுமற்ற மக்களை பெரியசாதிகளெனப் பின்பற்றுவதினும் புனுகுபூனையையும், கஸ்தூரி மானையும் பின்பற்றுவோமாயின் சுகமுண்டு.

சாதியென்னு மொழி சாதித்தோர் சாதிப்போர் என்னுஞ் செயலைப்பற்றிய மொழியாதலின் அச்சாதனைச்செயல் தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பாதுகாப்பதாயின் அதுவே பெரிய சாதனமாகும். அச்சாதனமுடையவர்களே பெரியசாதிகளென் றழைக்கப்படுவார்கள். அவர்களையே மேன்மக்கள் என்றும் வணங்கலாகும்.

- 2:36; பிப்ரவரி 17, 1909 –

26. கிராமக் கரணங்களுக்கும் கஷ்டமாமோ

1908ம் வருடம் பெப்ரவரி மாதம் 6ம் நாள் சனிவாரம் வெளிவந்த "சுதேசமித்திரன்" பத்திரிகையில் (பாஸ்கரன்) எனக் கையொப்பமிட்டு கர்ணங்களுக்கு அதிக வேலை இருக்கின்றதென்றும், அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் 8-ரூபாய், 10- ரூபாய் போதாதென்றும் மிக்க வருத்தத்துடன் வரைந்திருக்கின்றார்.

இவ்வகை வரைந்தவர் கிராமங்களுக்கு வரும் மேலதிகாரிகளுக்கு கர்ணங்களே தங்கள் சொந்த செலவில் சப்ளை செய்யவேண்டியதாய் இருக்கின்றதென்றுங் குறிப்பிட்டிருக்கின்றார்

8-ரூபாய், 10-ரூபாய் சம்பளம் வாங்கும்படியானக் கர்ணம் மேலதி காரிகள் சப்ளைகளுக்காக சிலவு செய்யக்கூடுமோ அல்லது குடிகள் தலையில் கல்லைப்போடுவதோ விளங்கவில்லை. கல்லைப்போடா கர்ணமாயிருப் பாராயின் இவரது குறைந்த சம்பளம் அறிந்த மேலதிகாரிகள் இவரது சப்ளையை வீணே விரும்பமாட்டார்.

குடிகள் தலையில் கல்லைப்போட்டு பொன்தாலி கட்டியுள்ளவர்களுக் கெல்லாம் மரத்தாலிக் கட்டச்செய்து பொருளை சேகரிக்கும் கர்ணங்களின் காட்சியைக் கண்ணாறக்கண்ட மேலதிகாரிகள் விண்ணாணமிட்டு வீண் சப்ளை கேழ்க்கின்றார்கள்.

அவ்வகை வீண்சப்ளை கேழ்க்கும் மேலதிகாரிகளுக்கு நமது பாஸ்கரன் விண்ணப்பஞ்செய்துக் கொள்ளுவாராயின் கர்ணங்களுக்குள்ள மேல்சம் பாதனை மேலதிகாரிகளால் வேணமட்டும் விளங்கிப்போம். சுதேசிகள் செய்யும் அக்கிரமங்கள் சுதேசிகளாலேயே வெளிவருமாயின் பரதேசிகளும் பட்சமின்றி விசாரித்து கர்ணங்களைக் குட்டிக்கர்ணங்களாக்கிவிடுவதுமன்றி குடிகளுக்குள்ள கஷ்ட நஷ்டங்களையும் நீக்கி ஆதரிப்பார்கள்.

- 2:36; பிப்ரவரி 17, 1909 –

27. தற்காலம் மடாதிபர்களும், புரோகிதர்களுமுண்டோ?

மடாதிபதிகளென்னும் மொழியின் இலக்கணமானது பாலி பாஷையில் மஹாயிட அதிபதிகளென்னப்படும். அந்த மகாயிடமாம் தெய்வசபையோர் செயல்களோ நல்லூக்கம், நல்லமைதி, நல்வாய்மெய், நற்கடைபிடி முதலிய சுத்தவிதய முடையவர்களாயிருந்து மக்களிடத்தில் யாதொரு பேதாபேதமு மின்றி இலக்கணசாஸ்திரங்களையும், இலக்கிய சாஸ்திரங்களையும், கணித சாஸ்திரங்களையும் கற்பித்து தன்ம அவுடதப் பிரயோகங்களும் செய்து வந்தார்கள்.

இத்தகைய சபைக்குத் தலைவர்களே மாயிடவதிபதிகளென்று அழைக்கப்பெற்றார்கள். அவர்களின் ஞானக் கருணாகரச் செயலால் மாத மும்மாறி பெய்யவும், தானியாதிகள் பெருகவும், குடிகள் சீர்பெறவும், கோன்கள் ஆறுதலினின்று நீதி செலுத்தியும் வந்தார்கள். தற்காலம் அத்தகைய மடாதிபதிகள் யாரேனுமுண்டோ! இத்தேச வெத்திக்கினுங் கிடையாவாம்.

புரோகிதர்களென்னும் வார்த்தையின் இலக்கணம் பாலிபாஷையில் பிரயோயிதர்களென்னப்படும். யாது பிரயோயிதமென்னில் வருங்காலம் போங்-