பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


60. கற்பூரம் கொளுத்துதல்

வினா : நம் தேசத்தில் இறந்தவுடன் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைக்கின்றார்களே அது என்ன காரணத்தினால் அம்மாதிரி செய்கிறார் களென்று அடியேனுக்கு விளங்காதபடியால் அடியேனுடைய சங்கையை நிவர்த்தி செய்வீரென்று நம்புகிறேன்.

தன்மப்பிரியன், பம்பாய்.

விடை : அன்பரே, தாம் வினாவிய தேங்காய் கற்பூர சங்கை விசேஷித் ததேயாம். அதாவது சிலகாலங்களுக்கு முன்பு தோன்றிய காளிகாதேவி கன்னகாபரமேஸ்வரி இவர்களுக்கு, ஆடுமாடுகளை கொலை செய்து பூசிப்பது போல் சாந்ததேவதையை பூசிப்போர் தேங்காயுடைக்கும் ஓர் வழக்கத்தை அநுசரித்து வந்தார்கள். பூர்வப் பலகாரம் அவுல் கடலை வாழைப்பழம் தேங்காய் இவைகளேயாதலின் தேவதைப் பெயர்சொல்லி தேங்காயுடைத்து அவுல் கடலையுடன் சேர்த்துப் புசிப்பதற்கேயாம். கருப்பூரத்தைக் கொளுத்துங் குணம் அவ்விடமுள்ளக் கெட்ட நாற்றங்களைப் போக்கி சுத்தஞ் செய்வதற்கேயாம். அதை ஓர் மக்கள் சுகாதார ஒளடதமென்றே கூறல் வேண்டும்.

- 4:18; அக்டோபர் 12, 1910 -

61. மாவலி பரிநிருவாணம்

கார்த்திகை மாதம் பிறந்தவுடன் புளியம்பட்டை, வேப்பம்பட்டை ஆண்பனை காய் (பனம்புழுக்கு) இவைகளைச் சுட்டுக் கரியாக்கி அஃதுடன் உப்பு அல்லது பொட்டிலுப்பு சேர்த்தறைத்து துணியில் கட்டி மாளிய என்று சுற்றிவருவதோடு தீபத்தன்று கம்புதட்டுகளில் மனிதனைப்போல் சுளுந்து கட்டி மேளமடித்துக்கொண்டு குறித்த எல்லையில் போய் அடுத்த ஊராரை உதாசினமொழிகளால் திட்டுவதும், கொக்கரிப்பதும், கூச்சலிடுவது மாகிய செயலிலிருக்கிறார்கள் அடுத்தவூராரும் குறித்த எல்லையில். நின்று மேற்கூறியபடி கண்டவாறு செய்கிறார்கள். இதினால் சண்டையும் நேர்ந்து வருகிறது. இவை என்ன காரணம்? எக்காலத்திலிருந்து நடைப்பெற்றுவருகிற தென்பதை விளக்கி யாட்கொள்ள வேணுமாய் வேண்டுகின்றனன்.

பி.எஸ். அச்சுதானந்தன், திருப்பத்தூர்.

விடை : அதாவது மாவலிச் சக்கரவர்த்தியாரவர்கள் பரிநிருவாண மடையப்போகுங்கால் பௌத்த சங்கத்தோர்களையும், கிராமவாசிகளையும் அருகிலழைத்து தனது பரிநிருவாணத்திற்குப்பின் தேகத்தை சக்கரவர்த்தி தேகமென்று யாதொரு சிறப்பையுஞ் செய்யாமல் வைக்கோலால் சுற்றிப் பிரிக்கட்டி இழுத்துக்கொண்டுபோய் தகனஞ்செய்துவிடும்படி ஆக்கியாபித்து பரிநிருவாண மடையுங்கால் உச்சியிற் சோதி கழண்டுப் பிரகாசித்து தேகமுழுவதும் சோதி பொரிகளெழும்பி பரந்து மறைந்ததாக சுருதி கூறுவதன்றி அந்நிருவாண நாளைக் கொண்டாடுவதற்கு வருடந்தோரும் சுளகுபிரி கட்டி இழுப்பதுடன் சோதி பொரி எழும்ப சுற்றும் குழல் கட்டி சுற்றுகின்றார்கள். அதை சுற்றுங்கால் "மாவலியோ மாவலி மாவலி மன்ன பேரொளி" எனச் சுற்றுவது பூர்வ வழக்கமாகும். அவ்வழக்கத்தை வருடந்தோறும் செய்து வந்தபோதிலும் புரட்டாசி மாதம் செய்ய வேண்டி யதை கார்த்திகை மாதத்தில் மாற்றிவிட்டார்கள். "மாவலியோ மாவலி மாவலி மன்னன் பேரொளி" என்பதை மாவலியோ மாவலி மாவலிவண்ணன் பெண்சாதி இடுப்புடைந்து செத்தாளாமென்று மாற்றி சோதியின் பரிநிருவாண மகத்துவத்தைக் கெடுத்துவிட்டார்கள். சக்கிரவர்த்தியார் வாக்கு தவிராமல் பிரிகட்டி இழுத்தவர் களுக்கும், அவர் மீது அன்புமிகுத்தக் குடிகளுக்கும் நேர்ந்த கலகத்தை ஒர் ஐதீகமாகக் காட்டிவருகின்றார்கள்.

அகஸ்தியர் ஞானம்

விழித்துமிகப்பார்த்திடவே பொரிதான்வீசும் / முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலேபோகாமல் ஒருமனதாய் நின்றால் / சுத்தமென்ற நாதவொலிக் காதிற்கேழ்க்கும்