பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 ) சுந்தர சண்முகனார்

எழுதிய படிவம் ஒத்து எய்து வான்தனை
முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்

(49)

என்பது பாடல். அவலம் (அழுகை) என்பது எட்டு மெய்ப் பாடுகளுள் ஒன்று- ஒன்பது சுவைகளுள் (நவரசங்களுள்): ஒன்று. எனவே, பரதன், அழுகை என்னும் மெய்ப் பாட்டின் மொத்த உருவமாகக் காணப்பட்டான். அதாவது, துயரின் எல்லைக் கோட்டின் இறுதியில் இருந்தான் என்பது கருத்தாகும்.

தொல்காப்பியர் அவலத்தை அழுகை' என்றே. மெய்பாட்டியலில் கூறியுள்ளார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

(3)

என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் "அழுகை என்பது அவலம்" என உரை வரைந்துள்ளார். தண்டியலங்கார ஆசிரியர், தண்டியலங்காரம்- பொருளணியியலில், அழுகையை, அவலம் என்று கூறியுள்ளார்.

வீரம் அச்சம் இழிப்பொடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே

(44)

என்பது நூற்பா. எனவே, அழுகை எனினும் அவலம் எனினும் ஒன்றே. தொல்காப்பியர், நான்கு காரணங்களால் அழுகை வரும் என்று கூறியுள்ளார்

இளிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே

(5)

என்பது நூற்பா. இந்த நான்கனுள் இழவு' என்பதற்கு, 'இழவு என்பது, தந்தையும் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலிய வற்றையும் இழத்தல்' எனப் பேராசிரியர் விளக்கம் தந்துள்ளார்.