பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 சுந்தர சண்முகனார்



விரிஇருள் பகையை ஓட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒருதனித் திகிரி உந்தி உயர்புகழ் நிறுவி நாளும் இருநிலத்து எவர்க்கும் உள்ளத் திருந்து அருள்புரிந்து வீந்த
செருவலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான்

(21)

இது ஞாயிறு மறையும் மாலைக் காட்சி பற்றிய பாடல். மன்னனுக்கும் கதிரவனுக்கும் பொருந்துமாறு கம்பர் கற்பனை புரிந்துள்ளார். மன்னன் தனித் திசிரி உந்துதல், உலகில் உள்ள வேறு மன்னர்கள் இவனுக்குக் கீழ்ப்பட்டவர்களே - இவன் ஒருவனே எல்லாரையும் வென்று ஒற்றை ஆழி உருட்டுகிறான்- வேறு எவரும் உருட்டவில்லை. கதிரவன் புகழ் நிறுவுகிறான் என்றால், கதிரவனை எல்லாரும் புகழ்ந்து வழிபடுகின்றனர் என்பது கருத்து. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் முதல் இரண்டடிகளில் தெரிவித்துள்ள,

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு

என்னும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இளங்கோ அடிகளும் சிலப்பதிகாரத்தை “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' எனப் போற்றித் தொடங்கி யுள்ளாரல்லவா? கதிரவன் எல்லாரையும் காப்பவன் என்பது, ஞாயிறு இல்லாவிடின் மழை இல்லை-விளைச்சல் இல்லை- உயிர்கட்குத் தேவையான வெப்பம் இல்லை- உலக வாழ்வே நடைபெறாது- என்பதைக் குறிப்பதாகும்.

வனம் புகு படலம்

குறு நகை

இராமன் சீதையுடன் காட்டில் சென்றுகொண்டிருந்த போது, வழியில் உள்ள பல காட்சிகளைக் காட்டியும்