உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

யார் கொடுக்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள்? என்று விழிக்கிறான். இதற்குக் காங்கிரசா பொறுப்பு?".

இது காமராஜுடைய கேள்வி. அடுத்து--

“காங்கிரஸ் அரசாங்கம் வந்தவுடன் ஊழல் வந்து புகுந்து வில்லை. அது 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. காரணங்களைக் கண்டறிந்து இத் தீங்கைக் களைய வேண்டும்”

5,000 ஆண்டுக் காலமாக லஞ்சம் ஊழல் இருந்து வருகிறது என்ற வரலாற்றை காமராஜ் அவர்கள் உலகிற்கு உணர்த்துகிறார். "காங்கிரசில் உள்ள கடைசித் தொண்டனாவது இவ்வளவு பணம் வாங்கினான் என்று நிரூபிக்க முடியுமா? நிரூபிக்க முடியாது என்று தெரியும், ஊழல்பற்றிக் கூச்சல் போடுபவர்கள்தான் ஊழல் நிறைந்தவர்கள்” (பலத்த கைதட்டல்)

இதை ஒவ்வொருவரும் சுவரொட்டி போட்டு ஒட்டி வைக்க வேண்டும். “ஊழல்பற்றி கூச்சல் போடுகின்றவர்கள்தான் ஊழல் நிறைந்தவர்கள்”. இது காமராஜ் "சமவாழ்வு" புத்தகத்தில் எழுதியிருக்கின்ற பொன்மொழிகள். அவர் “நிரூபிக்க முடியுமா?” என்று கேட்கிறார். “நிரூபிக்க முடியுமா?” என்று நாங்கள் கேட்டால் அது தவறாகிறது. காமராஜ் கேட்டார் அப்போது லஞ்சம் ஊழல் என்கிறீர்களே, நிரூபிக்க முடியுமா என்று. லஞ்சம் ஊழல் என்று சொல்லியே, இதையே தாரக மந்திரமாக வைத்து இந்த ஆட்சியை ஒழித்துவிடலாம் என்று 71-லே கங்கணம் கட்டினார்கள். தொடர்ந்து அதையேதான் இன்றைக்கும் சொல்லி வருகிறார்கள். அ.தி.மு.க. அந்தப் பணியை வேகமாகச் செய்கிறது. ஹாண்டே அவர்களையும், பொன்னப்ப நாடார் அவர்களையும் விட்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பினால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்காக அந்தப் பக்கம் போகிறேன்.

அ.தி.மு.க, அண்ணா தி.மு.க. என்று அவர்கள் பெயரிட்டு அழைத்தாலும், அ.தி.மு.க.வில் அண்ணா அங்கே இல்லை, அண்ணாவின் கொள்கைகள், அண்ணாவின் கொள்கையான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அண்ணாவின் ஜனநாயக நெறி, இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திலே கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. (பலத்த கைதட்டல்). அ.தி.மு.க.-வில் உள்ள அந்த ‘அ’-வை முன்னால் சேர்த்தால் நல்ல பொருள் வரும்! 'நீதி' 'அநீதி' ஆகும். 'தர்மம்' ‘அதர்மம்' ஆகும். 'நியாயம்' 'அநியாயம்' ஆகும்.