28
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இப்பொழுது அவையிலே கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். இது உயிரோடு இருக்கிறது. அது மாத்திரமல்ல, அவர்களேகூட நேற்று சில பேர்களை அனுப்பி உயிரோடு இருக்கிறதா, இல்லையா என்று பார்த்துவரச் சொல்லி, உயிரோடு இருக்கிறது என்று செய்தியைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆக, நேற்று ஒரு நாளைக்குக்கூட எம்.ஜி.ஆர். கட்சியினர்கள்-அண்ணா தி.மு.க.-வினர்கள் இந்த அவைக்கு வந்ததன் மூலம் இந்த சட்டசபை சாகவில்லை என்பதை அவர்களும் ஒரு வழியிலே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலபேர் தங்களுக்கு ஏதாவது வந்துவிட்டால் அது உலகத்துக்கே வந்துவிட்டதாக கருதுகிற பரந்த நோக்கத்தைக் கொண்டிருக் கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கதை சொல்வார்கள். ஒரு நரி நட்டாற்றில் அடித்துக்கொண்டு போகப்படும்பொழுது சத்தம் போட்டதாம். "உலகம் போயிற்று, உலகம் போயிற்று" என்று கத்தியதாம், உலகம் போயிற்று, உலகம் போயிற்று என்று கத்துகிறதே என்று கரையில் நின்றவன் அவசரமாக ஓடி அந்த நரியைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து “உலகம் போயிற்று, உலகம் போயிற்று" என்று சொன்னாயே, ஏன்? என்று கேட்டானாம். நரி சொன்னதாம், "நான் ஆற்றோடு போய் செத்துப்போயிருந்தால், என்னைப் பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா” என்று நரி சொன்னதாம். அதைப்போலவே சிலபேர் தங்கள் தங்களைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் செத்துப்போய்விட்டது என்று, மற்றவர்களைப் பார்த்து, ஒரு அவையைப் பார்த்து "செத்துப்போய் விட்டது" என்று கூறுகிறார்கள்.
ஆகவே, இங்கே பேசியவர்களெல்லாம் எடுத்துக் காட்டியதில் ஒன்றை நான் ஒத்துக்கொள்கிறேன். இந்த அவையைப் பற்றி விமர்சிக்கின்ற உரிமை உறுப்பினர்களுக்கு இருக்கிறது. ஆனால் எந்த வகையில் விமர்சிக்க வேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மாண்புமிகு அவை முன்னவர் இங்கே கேட்டது போல, இந்த அவையே செத்துவிட்டது என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோமா, நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று அவர்கள் இங்கே கேட்டார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
திரு. வீராசாமி அவர்கள் கொண்டு வந்தது உரிமைப் பிரச்சினைக்கு உரியதுதான் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.