உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

579

கொண்டு, அதன் அடையாளமாக அவர்கள் தமிழகத்தைவிட்டு வடக்கே சென்று அங்கே மத்திய அமைச்சராக ஆனாலும், அந்த நேரத்திலும்கூட அவர்களுடைய தமிழ்த் தொண்டு தமிழகம் முழுவதும் ஒளி வீச வேண்டுமென்றும், இந்தியத் துணைக் கண்டம் முழுதும் பரவ வேண்டுமென்றும், திருவள்ளுவர் படத்தையும், கவிச் சக்கரவர்த்தி பாரதியார் படத்தையும் அஞ்சல் தலைகளிலே வெளியிட்ட பெருமை டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கே உரியதாகும். பணவிடைத் தாள்களிலே தமிழ் மொழியைப் புகுத்துவதற்கு டாக்டர் சுப்பராயன் அவர்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் இன்றையத் தினம் மறைந்து விட்டாலும், அவருடைய காலத்திலே வெளியிட்ட திருவள்ளுவர் உருவ அஞ்சல் தலைகளும், பாரதியாருடைய உருவ அஞ்சல் தலைகளும், நம்முடைய கைகளிலே கிடைக்கும் பணவிடைத் தாள்களிலே ஒளிவிடும் அந்த தமிழ் மொழியும், அவர் இந்த நாட்டிலே நடத்திக் காட்டிய நிர்வாகத் திறனும் என்றென்றும் அழியாமல், மறைந்த மாவீரர் டாக்டர் சுப்பராயன் அவர்களின் திருவுருவம் நம்முடைய இதயத்திலே என்றென்றும் குடிகொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆளும் கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், டாக்டர் சுப்பராயன் அவர்களே ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர்களுடைய மக்கள் வேறு ஒரு அரசியல் இயக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு எந்தவிதத்திலும் அவர் தடையாக இல்லாமல், அவர்களுடைய அரசியல் பிரச்சினைகளிலே தலையிடாமல், அவர்களைக் கண்டிக்காமல், அந்தக் குடும்பத்தில் அவரவர்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு இடம் உண்டு என்ற வகையில், அவருடைய நல்ல பெருந்தன்மையை அவருடைய குடும்பத்திலேயே எடுத்துக்காட்டி, அந்தப் பெருந்தன்மையை நாட்டிலும் பரவ விடவேண்டும் என்று வழிவகுத்துக் காட்டிய பெரியவர் அவர். அப்படிப்பட்ட பெரியவரை நாம் இன்றையதினம் இழந்து மெத்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம்.